தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 22 ஆம் தேதி தொடங்குகிறது என தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 400க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கான தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA-2024) செயல்முறை மே 6 அன்று தொடங்கியது, சுமார் 2 லட்சம் மாணவர்கள் சேர்க்கை செயல்முறைகளை முடித்துள்ளனர். இதனையடுத்து ஜூன் 6 ஆம் தேதியன்று ரேண்டம் எண்கள் வழங்கப்பட்டன. சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களின் பதிவேற்றம் ஜூன் 12 அன்று நிறைவடைந்தது. ஜூன் 13 முதல் ஜூன் 30 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது.
இந்தநிலையில், இன்று (ஜுலை 10) பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து பொறியியல் கலந்தாய்வு அட்டவணையையும் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் வெளியிட்டது.
அதன்படி, பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 22 ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டு இடங்களில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
இதேபோல் பொதுப் பிரிவில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 25 மற்றும் 27 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
பொதுப் பிரிவு, 7.5% இடஒதுக்கீட்டு பொதுப் பிரிவு, தொழிற்படிப்புகள் பிரிவு ஆகியவை அடங்கிய பொது கலந்தாய்வு ஜூலை 29 ஆம் தேதி முதல் செப்டம்பர் 3 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
துணைக் கலந்தாய்வு செப்டம்பர் 6 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
எஸ்.சி.ஏ இடங்களை எஸ்.சி மாணவர்கள் தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு செப்டம்பர் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
செப்டம்பர் 11 ஆம் தேதியுடன் கவுன்சலிங் செயல்முறை முடிவடைகிறது. இவ்வாறு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“