தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான (TNEA 2024) தரவரிசைப் பட்டியலில் முதல் இரண்டு ரேங்க் பெற்ற மாணவிகள் மற்றும் 7.5% உள் ஒதுக்கீட்டில் முதலிடம் பிடித்த மாணவி, ஆகிய மூவரும் நாடு முழுவதும் பொறியியல் படிக்க விரும்புபவர்களின் பெரிய விருப்பமாக இருக்கும் கம்ப்யூட்டர் சயின்ஸ் (Computer Science), செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), இயந்திர கற்றல் (Machine Learning), தரவு அறிவியல் (Data Science) படிப்புகளை படிக்க விரும்பவில்லை என்று கூறி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று (ஜூலை 10) வெளியிடப்பட்டது. இதில் 200க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்று செங்கல்பட்டு மாணவி தோஷிதா லட்சுமி முதலிடம் பெற்றுள்ளார். 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 598 மதிப்பெண்கள் பெற்ற தோஷிதா லட்சுமி, ஆங்கிலம் தவிர மற்ற அனைத்து பாடங்களிலும் சென்டம் எடுத்துள்ளார்.
இந்த நிலையில், பொறியியல் பட்டியலில் முதல் ரேங்க் பெற்ற தோஷிதா லட்சுமி, அண்ணா பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் (ECE) படிக்க விரும்புகிறார். மேலும் இ.சி.இ முடித்த பிறகு, சிப் உற்பத்தி தொடர்பான வி.எல்.எஸ்.ஐ (VLSI) படிப்பை படிக்க விரும்புகிறார் என டி.டி நெக்ஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
இதேபோல், தரவரிசைப் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்த திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த நிலாஞ்சனா, அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் படிப்பை படிக்க விரும்புகிறார். மேலும், ஏரோஸ்பேஸ் தொடர்பாக முதுநிலைப் படிக்க விரும்பும் நிலாஞ்சனா கேம்பஸ் இண்டர்வியூ வேலை வாய்ப்பு பெறவும் விரும்புகிறார்.
அடுத்ததாக, சேலத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து 7.5% உள் ஒதுக்கீட்டின் கீழ் தரவரிசைப் பட்டியலில் முதல் ரேங்க் பெற்ற ராவணி என்ற மாணவி அண்ணா பல்கலைக்கழகத்தில் இ.சி.இ படிப்பை படிக்க விரும்புகிறார். மேலும், நாட்டிற்கு சேவை செய்ய விஞ்ஞானி ஆக வேண்டும் என்பதே எனது நோக்கம் என்றும் ராவணி கூறுகிறார்.
சமீபகாலமாக கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகளுக்கு அதிக மவுசு இருந்து வருகிறது. கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, டேட்டா சயின்ஸ், ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ், மெசின் லேர்னிங், சைபர் செக்யூரிட்டி, இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் போன்ற படிப்புகளை படிக்க மாணவர்கள் அதிகம் விரும்புகின்றனர். இந்த ஆண்டு பல்வேறு கல்லூரிகளில் இந்தப் படிப்புகளுக்கான இடங்கள் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்தநிலையில், டாப் ரேங்க் மாணவர்கள் இந்த படிப்பை விரும்பாமல் கோர் படிப்புகளான இ.சி.இ போன்றவற்றை விரும்புவது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“