Advertisment

TNEA 2024: பொறியியல் கவுன்சலிங்கில் அதிகரிக்கும் ஆப்சென்ட்; காரணம் என்ன?

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2024: கவுன்சலிங் தாமதத்தால் அதிகரிக்கும் ஆப்சென்ட்; தவறான சாய்ஸ் ஃபில்லிங் காரணமாக நல்ல கல்லூரிகளை இழக்கும் டாப்பர்கள்

author-image
WebDesk
New Update
Engineering Counseling

பொறியியல் படிப்புகளுக்கு மவுசு இருந்தாலும், தவறான சாய்ஸ் ஃபில்லிங் காரணமாக கவுன்சலிங்கில் இடம் கிடைக்காதவர்கள் அல்லது விண்ணப்பித்தப் பின் கலந்துக் கொள்ளாதவர்கள் அல்லது ஒதுக்கப்பட்ட இடத்தை ஏற்காதவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.

Advertisment

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 440க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் பொதுப்பிரிவில் அழைக்கப்பட்ட 26,678 மாணவர்களில், 17,679 பேருக்கும், 7.5% இடஒதுக்கீடு பிரிவில் அழைக்கப்பட்ட 1,406 மாணவர்களில், 1,115 மாணவர்களுக்கும் இடங்கள் ஒதுக்கப்பட்டன.

அந்தவகையில், பொதுப்பிரிவில் 8,999 பேருக்கும், அரசுப் பள்ளி மாணவர்களில் 291 பேருக்கும் சீட் கிடைக்கவில்லை அல்லது கவுன்சலிங்கில் கலந்துக் கொள்ளவில்லை. அந்தவகையில் சீட் கிடைக்காதவர்களின் எண்ணிக்கை பொதுப் பிரிவில் 33.73% மற்றும் முன்னுரிமை இட ஒதுக்கீடு பிரிவில் 20.70% ஆகும். வழக்கமாக, முதல் சுற்றில் சீட் கிடைக்காதாவர்களின் சதவீதம் 20% ஆக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.

இதற்கு மருத்துவ கவுன்சலிங் இன்னும் தொடங்காதது மற்றும் பொறியியல் கவுன்சலிங் தாமதமாக தொடங்கியது ஆகியவை முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. எம்.பி.பி.எஸ் கவுன்சலிங் தாமதம் காரணமாக பொறியியல் சீட் கிடைத்தாலும் அதை ஏற்கவில்லை. வழக்கமாக காலியிடங்களை தவிர்க்க மருத்துவ கவுன்சலிங்கிற்கு பிறகே பொறியியல் கவுன்சலிங் நடைபெறும். இந்த மருத்துவ கவுன்சலிங் நீட் குளறுபடிகள் தொடர்பான வழக்குகள் காரணமாக தாமதமாகியுள்ளதால், பொறியியல் கவுன்சலிங் அதற்கு முன்னதாகவே தொடங்கப்பட்டுள்ளது. அதேநேரம் பொறியியல் கவுன்சலிங் தாமதமானதால் சிலர் ஏற்கனவே சுயநிதி கல்லூரிகளில் மேனேஜ்மெண்ட் இடங்களில் தாங்கள் விரும்பிய படிப்பில் சேர்ந்துவிட்டனர்.

அடுத்ததாக சாய்ஸ் ஃபில்லிங்கில் செய்யும் தவறுகள் காரணமாக, தாங்கள் விரும்பிய கல்லூரி மற்றும் பாடப்பிரிவு கிடைக்காததால், சில மாணவர்கள் ஒதுக்கப்பட்ட சீட்டை ஏற்கவில்லை. அவர்கள் அடுத்த சுற்றில் கலந்துக் கொள்ள தயாராகி வருகின்றனர்.

இதற்கிடையே, அதிக கட்-ஆஃப் பெற்ற மாணவர்கள், மோசமாகச் செயல்படும் கல்லூரிகளைத் தேர்ந்தெடுத்திருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம், அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ், கல்லூரிகளை கவனமாக தேர்வு செய்யுமாறு மாணவர்களை வலியுறுத்தினார். 

"191 மதிப்பெண்களுடன் கட்-ஆஃப் மதிப்பெண் பெற்ற மாணவர் 100 வது இடத்தைப் பெற்ற கல்லூரியைத் தேர்வுசெய்ததைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். எம்.பி.சி பிரிவைச் சேர்ந்த அந்த மாணவர், மாநிலத்தின் முதல் 10 கல்லூரிகளில் ஒன்றில் எளிதாக இடம் பெற்றிருப்பார். அண்ணா பல்கலைகழகத்தின் துறைகளில் ஏதாவது ஒரு நல்ல படிப்பில் சேர்ந்திருக்கலாம். கல்லூரியைத் தேர்ந்தெடுத்த பிறகு உதவிக்காக எங்களை அணுகினார். அவரை கல்லூரியில் இருந்து விலகி, இரண்டாவது சுற்றில் கவுன்சிலிங்கில் பங்கேற்கச் சொன்னோம். நிறைய மாணவர்கள் இதுபோன்ற புகார்களுடன் எங்களிடம் வந்துள்ளனர். நல்ல கல்லூரியில் படிக்கும்போது அவர்களின் வாழ்க்கை முற்றிலும் மாறும் என்பதை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். குழந்தைகள் புத்திசாலித்தனமாக தேர்வு செய்வதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும். சாய்ஸ் ஃபில்லிங் செய்யும்போது அவர்கள் நலம் விரும்பிகளிடம் சென்று உதவியை நாட வேண்டும்,” என்று துணைவேந்தர் வேல்ராஜ் கூறினார்.

இதற்கிடையில், மற்ற துறைகளில் வழக்கமான படிப்புகளை விட கட்டணம் அதிகமாக இருந்தாலும் மாணவர்கள் சுய-ஆதரவு படிப்புகளை விரும்புகிறார்கள். சுய உதவிப் படிப்புகளுக்கு வழங்கப்படும் அனைத்து இடங்களும் அவற்றை வழங்கும் கல்லூரிகளில் நிரப்பப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தில் சுய உதவிப் படிப்புக்கு கூடுதலாக ரூ.10,000, உதவி பெறும் கல்லூரிகளில் ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை செலவாகும் என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tn Engineering Admissions Engineering Counselling
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment