இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை பகுப்பாய்வு செய்ததில், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள், சென்னை மண்டலத்தில் உள்ள கல்லூரிகளை விடவும் சிறப்பாக செயல்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA), 2024, குழுவால் நடத்தப்பட்ட கவுன்சிலிங்கின் மூலம், மேற்கு மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் 83.85% இடங்களை நிரப்பியுள்ளன, அதேநேரம் சென்னை மண்டலத்தில் உள்ள கல்லூரிகளில் 75.61% இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன என்று தி இந்து ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ், "உள்கட்டமைப்பு மற்றும் ஆசிரியர்கள் சிறப்பாக உள்ள கல்லூரிகளில் இடங்கள் நிரம்பியுள்ளன. தமிழகத்தில் உள்ள 50 நல்ல கல்லூரிகளில் பாதி மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்தவை, மேலும் சென்னையில் ஒரு சில கல்லூரிகள் மட்டுமே தங்களை மேம்படுத்திக் கொண்டிருக்கின்றன. சென்னையில் உள்ள கல்லூரிகள் போட்டித்தன்மையுடன் இல்லை, அவை மாநிலத்தின் தலைநகரில் இருப்பதால் மாணவர் சேர்க்கையை பதிவு செய்கின்றன," என்று கூறினார்.
கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி, ”திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை, தேனி மற்றும் தூத்துக்குடி ஆகியவற்றை உள்ளடக்கிய தென் மண்டலத்தில் 58.24% என குறைந்த அளவே மாணவர் சேர்க்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கு மாவட்டங்களிலும், சென்னையிலும் உள்ள கல்லூரிகள் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குகின்றன. மேற்கு மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளின் வேலைவாய்ப்பு பதிவும் நன்றாக உள்ளது, என்று கூறினார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, ”மேற்கு மண்டலத்தின் செயல்பாடுகளுக்கு தரமான ஆசிரியர்கள் மற்றும் நியாயமான நிர்வாகக் கொள்கைகள் காரணம். கோவையில் உள்ள பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளில் சிறந்த உள்கட்டமைப்பு உள்ளது. நல்ல வேலை வாய்ப்புப் பதிவைக் கொண்டிருப்பதோடு, அறிவு நகரமாக அறியப்படும் கோயம்புத்தூர், சென்னையை விட கலாச்சார ரீதியாக சிறந்து விளங்குகிறது,” என்று கூறினார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழக தொழில் ஒத்துழைப்பு மையத்தின் இயக்குனர் சண்முகசுந்தரம் கூறுகையில், சென்னை ஒரு தகவல் தொழில்நுட்ப மையமாக இருப்பதால், மேற்கு மாவட்டங்கள் முக்கிய பொறியியல் பிரிவுகளில் இருந்து மாணவர்களை ஈர்த்து வருகின்றன, முக்கிய பொறியியல் துறைகளில் நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளதால் மேற்கு மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் பயனடைகிறார்கள் என்று கூறினார்.
"கம்ப்யூட்டர் மற்றும் தொடர்புடைய வேலைகளுக்கான ஊதிய தொகுப்பு ஒப்பீட்டளவில் ஒரே மாதிரியாக உள்ளது. இப்போது, ஐ.டி வேலைகளைப் பொறுத்தவரை, சென்னைக்கு சமமாக கோயம்புத்தூர் வளர்ந்து வருகிறது. தொழில்துறை இணைப்பு அதிகமாக இருந்தாலும், முக்கிய பொறியியல் துறைகளில் சென்னையில் குறைவான எண்ணிக்கையே உள்ளது,” என்று சண்முகசுந்தரம் கூறினார்.
மேலும், அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்த பொறியியல் கல்லூரிகளின் சேர்க்கையை நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் குறைத்துள்ளன. சென்னையில் மூன்று நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உள்ளன, ஒவ்வொன்றும் ஆண்டுதோறும் குறைந்தது 20,000 மாணவர்களை சேர்க்கின்றன. எனவே, இந்தக் கல்லூரிகள் உள்கட்டமைப்பை மேம்படுத்தவில்லை. இதன் விளைவாக, அவர்களின் வேலை வாய்ப்புகள் சரிவை பதிவு செய்கின்றன. அதேசமயம், மேற்கு மண்டலத்தில், கல்லூரிகள் தொழில் தேவைகளைப் பூர்த்தி செய்து சிறப்பாகச் செயல்படுகின்றன என்றும் சண்முகசுந்தரம் கூறினார்.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப இயக்க சேவைகள் (IT மற்றும் ITeS) நிறுவனங்களின் மனித வள (HR) பணியாளர்கள் மோசமான போக்குவரத்து இணைப்பு காரணமாக சிறிய நகரங்களில் இருந்து மாணவர்களைச் சேர்க்க வருவதில்லை. எளிதான போக்குவரத்து மற்றும் பல்வேறு வசதிகள் காரணமாக ஐ.டி துறை ஹெச்.ஆர்.,கள் சென்னை, கோவையை தேர்வு செய்கின்றனர் என்றும் சண்முகசுந்தரம் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.