தமிழகத்தில் 76 பொறியியல் கல்லூரிகளில் கூடுதல் சேர்க்கை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் 11 கல்லூரிகள் மூடப்பட உள்ளன.
Advertisment
தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் செயல்முறை விரைவில் தொடங்க உள்ளது. இந்தநிலையில் 11 பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட உள்ளதாக கல்வி ஆலோசகர் சுரேஷ் சீதாராமன் தனது யூடியூப் வீடியோவில் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகம் தமிழகத்தில் உள்ள 87 பொறியியல் கல்லூரிகளுக்கு என்.ஓ.சி வழங்க மறுத்துவிட்டது. இதனால் 76 கல்லூரிகள் தங்கள் பொறியியல் சீட் எண்ணிக்கையை அதிகப்படுத்த முடியாது.
அடுத்ததாக 11 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட உள்ளன. கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் 10 சதவீதத்திற்கும் குறைவாக சேர்க்கை உள்ள பொறியியல் கல்லூரிகள், தங்கள் சேர்க்கையை உயர்த்தாவிட்டால், அடுத்த ஆண்டு சேர்க்கைக்கு அனுமதி வழங்க முடியாது என 41 கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்தநிலையில், அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில், இந்த நடவடிக்கை முதன்முறை என்பதால் 10% அளவை 5% ஆக குறைக்க முடிவு எடுக்கப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டு 11 கல்லூரிகள் மூடப்பட உள்ளன. இருப்பினும் அந்த கல்லூரிகளுக்கு ஒரு வாய்ப்பாக ஜூலை மாதத்திற்குள் சேர்க்கையை உயர்த்தினால், என்.ஓ.சி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“