/indian-express-tamil/media/media_files/KTRg5XxPMAbr8qw1XQbL.jpg)
பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வின் முடிவில் 37,179 இடங்கள் காலியாக உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 423 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு 1,90,624 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான பொதுக் கலந்தாய்வு கடந்த மாதம் தொடங்கியது. மூன்று சுற்று கவுன்சலிங்கின் முடிவில் சுமார் 1.45 லட்சம் இடங்கள் நிரம்பியிருந்தன.
இந்தநிலையில், மீதமுள்ள காலி இடங்களை நிரப்புவதற்கான துணை கலந்தாய்வு ஆகஸ்ட் 21 ஆம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்க 20,662 மாணவர்கள் தகுதிபெற்றனர். துணைக் கலந்தாய்வில் சாய்ஸ் ஃபில்லிங் செய்தவர்களுக்கான இறுதி ஒதுக்கீடு ஆணை ஆகஸ்ட் 24 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, பொதுப் பிரிவில் 7,767 பேர், தொழிற்கல்வி பொதுப் பிரிவில் 165 பேர், 7.5 சதவீத ஒதுக்கீட்டில் 32 பேர் என 7,964 பேருக்கு துணை கலந்தாய்வில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
பொறியியல் கலந்தாய்வு செயல்முறை இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அனைத்துச் சுற்றுகளின் முடிவில் ஒட்டுமொத்தமாக 1,53,445 இடங்கள் நிரம்பியுள்ளன. அதேநேரம் இன்னும் 37,179 இடங்கள் காலியாக உள்ளன. கடந்த ஆண்டை விட அதிக இடங்கள் நிரம்பினாலும், சுமார் 37,179 இடங்கள் காலியாக உள்ளன.
இந்நிலையில், எஸ்.சி, எஸ்.டி பிரிவுக்கான கலந்தாய்வு இன்று (ஆகஸ்ட் 25) நடைபெறுகிறது. மாணவர்கள் மாலை 7 மணி வரை சாய்ஸ் ஃபில்லிங் செய்யலாம். அவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீடு நாளை (ஆகஸ்ட் 26) வெளியிடப்படும். அதை உறுதி செய்பவர்களுக்கு 27 ஆம் தேதி இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.