/indian-express-tamil/media/media_files/KTRg5XxPMAbr8qw1XQbL.jpg)
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான மூன்றாம் சுற்று தொடங்கியுள்ள நிலையில், எத்தனை இடங்கள் காலியாக உள்ளன? சாய்ஸ் ஃபில்லிங் செய்த எல்லாருக்கும் இடங்கள் கிடைக்குமா? என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு மூலம் நடைபெறுகிறது. இந்தக் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்பில் அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 1.70 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 2.39 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதுவரை 2 சுற்று கவுன்சலிங் நிறைவடைந்து, தற்போது மூன்றாம் சுற்று கவுன்சலிங் தொடங்க உள்ளது.
இந்தநிலையில், மூன்றாம் சுற்றுக்கு எத்தனை இடங்கள் காலியாக உள்ளன? சாய்ஸ் ஃபில்லிங் செய்த எல்லாருக்கும் இடங்கள் கிடைக்குமா? என்பதை கல்வி ஆலோசகர் சுரேஷ் சீதாராமன் தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
பொறியியல் படிப்புகளில் 173241 இடங்கள் உள்ளன. இதில் முதல் சுற்றில் 26719 இடங்களும், இரண்டாம் சுற்றில் 61365 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேநேரம் மூன்றாம் சுற்றுக்கு 101589 மாணவர்கள் தயாராக உள்ளனர். ஆனால், 18998 மாணவர்களுக்கு இரண்டாம் சுற்றில் சீட் கிடைக்கவில்லை. எனவே இவர்களும் சேர்த்து 120587 மாணவர்கள் மூன்றாம் சுற்றில் சாய்ஸ் ஃபில்லிங் செய்ய உள்ளனர்.
அதேநேரம், தற்போது 85157 இடங்கள் மட்டுமே உள்ளன. எனவே 35430 மாணவர்களுக்கு சீட் கிடைக்காமல் போக வாய்ப்பு இருக்கு. ஆனால் பலர் சாய்ஸ் ஃபில்லிங் செய்யாமல் போகலாம். மேலும் தவறான சாய்ஸ் ஃபில்லிங்கால் பலருக்கு இடம் கிடைக்காமலும் போகலாம்.
மறுபுறம், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டு பிரிவில் சுமார் 1510 இடங்கள் மட்டுமே மூன்றாம் சுற்று கலந்தாய்வுக்கு வர வாய்ப்புள்ளது.
சென்னை, கோவை போன்ற பகுதிகளில் உள்ள பல சிறந்த கல்லூரிகளில் எஸ்.சி, எஸ்.டி, எம்.பி.சி பிரிவுகளுக்கு இன்னும் இடங்கள் இருக்க வாய்ப்புள்ளது. எனவே மூன்றாம் சுற்றில் கலந்துக் கொள்பவர்கள் இந்த இடங்களை சாய்ஸ் ஃபில்லிங்கில் தேர்வு செய்துக் கொள்ளுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.