/indian-express-tamil/media/media_files/KTRg5XxPMAbr8qw1XQbL.jpg)
தமிழக தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான புக்கிங் தொடங்கிவிட்ட நிலையில், பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை மூலம் அட்மிஷன் நடைபெறும். அதேநேரம், தனியார் கல்லூரிகளில் மேனேஜ்மெண்ட் கோட்டா இடங்களுக்கு அந்தக் கல்லூரிகளே அட்மிஷன் நடத்திக் கொள்ளும்.
இந்தநிலையில், பொறியியல் கவுன்சலிங்கில் சிறந்த கல்லூரிகளில் இடம்பெறமுடியாது என்று கருதும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள், அந்தக் கல்லூரிகளின் மேனேஜ்மெண்ட் கோட்டாவில் தங்கள் குழந்தைகளை சேர்ப்பர். இதற்கு கல்லூரிகள் தற்போது புக்கிங்கை தொடங்கிவிட்டன.
இந்தநிலையில், இந்த புக்கிங் அட்மிஷனுக்கு யார் செல்லலாம்? பெற்றோர்கள் கவனிக்க வேண்டியது என்ன? என்பதை கல்வி ஆலோசகர் சுரேஷ் சீதாராமன் விளக்கியுள்ளார்.
அதன்படி, தமிழகத்தில் சில தனியார் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைமுறை இப்போதே தொடங்கிவிட்டது. குறிப்பாக சிறந்த பொறியியல் கல்லூரிகளின் தரவரிசையில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களில் அட்மிஷன் ப்ராசஸ் ஆரம்பித்துவிட்டது. எனவே 185 கட் ஆஃப் மதிப்பெண்களுக்கு மேல் பெற வாய்ப்புள்ள மாணவர்கள் அட்மிஷன் புக்கிங் செய்வதில் சற்று யோசித்து செயல்படலாம்.
சிறந்த கல்லூரிகளை தவறவிட்டுவிடக் கூடாது என்பது முக்கியம் என்றாலும், நல்ல மதிப்பெண்கள் எடுக்க முடியும் என்று நம்பிக்கை இருப்பவர்களுக்கு புக்கிங் என்பது பண விரயமே. தலைசிறந்த கல்லூரிகளில் வேலை வாய்ப்பு எதிர்காலம் சிறப்பாக இருக்கிறது என்பது உண்மை என்றாலும், கல்லூரிகளை தேர்வு செய்யும் முன் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வி அறிவு நிலை, பொருளாதாரம், கல்லூரியின் சிறப்பு போன்றவற்றை கவனத்தில் கொள்ளுங்கள்.
எனவே புக்கிங் செய்யும் முன் கவனமாக இருங்கள். நல்ல கல்லூரியை தேர்வு செய்து தேவைப்பட்டால் புக்கிங் செய்யுங்கள். பெற்றோர்கள் தங்கள் மகன்/ மகள் நல்ல கட் ஆஃப் பெற மாட்டார் என்று கருதினால், உங்களுக்கு சிறந்த கல்லூரியில் படிக்க வைக்க வேண்டும் என்று ஆசையும், பொருளாதாரமும் இருந்தால் புக்கிங் செய்யலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.