பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான துணை கலந்தாய்வுக்கு ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 400க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இரண்டு சுற்று கவுன்சலிங் நிறைவடைந்து மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் துணைக் கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;
நடப்பு கல்வியாண்டில் (2025-26) பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வில் நிரப்பப்படாத இடங்களுக்கு துணை கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதில் 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் பொது கலந்தாய்வில் கலந்துகொள்ள இயலாத மாணவர்கள் பங்கேற்கலாம்.
https://www.tneaonline.org அல்லது https://www.dte.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகளை பயன்படுத்தி ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் வசதிக்காக அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த மையங்களின் விவரங்களை இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.