தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு மூலம் நடைபெறுகிறது. அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், அரசு கல்லூரிகள், அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் ஆகிய அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளுக்கும் கலந்தாய்வு மூலமே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
இந்தக் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்பில் அரசு ஒதுக்கீட்டுக்கு ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் நடப்பு கல்வி ஆண்டில் சேர்க்கை பெறுவதற்கான ஆன்லைன் விண்ணப்ப்ப பதிவு மே 7 ஆம் தேதி தொடங்கி ஜூன் 6 ஆம் தேதி முடிவடைந்தது. 2.5 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பொறியியல் படிக்க விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளும் முடிவடைந்துள்ளது.
இந்நிலையில், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை சென்னையில் உயர்கல்வி அமைச்சர் கோவி செழியன் வெளியிட்டார். நடப்பாண்டில் பொறியியல் படிப்பில் சேர 2.5 லட்சம் மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர், தரவரிசை பட்டியலுடன் இணைய வழி கலந்தாய்வுக்கான அட்டவணையும் வெளியிடபட்டுள்ளது. கணினி வசதி இல்லாத கிராமப்புற மாணவர்கள் மாவட்டங்களில் உள்ள உதவி மையங்களுக்கு சென்று கலந்தாய்வில் பங்கேற்கலாம், http://tneaonline.org என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்களது ரேங்க்
மதிப்பெண்களை அறியலாம்.
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்தவர்களில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சகஸ்ரா.ஜே முதல் இடத்தை பிடித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் கார்த்திகா.எஸ் இரண்டாம் இடத்தையும், அரியலூர் மாவட்டம் அமலன் ஆண்டோ மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார். 7.5% இட ஒதுக்கீட்டில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தரணி.வி முதலிடத்தையும், சென்னை மைதிலி. பி இரண்டாம் இடத்தையும், கடலூர் முரளிதரண்.கே மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
பொறியியல் கலந்தாய்வு ஜூலைஒ 7 முதல் தொடங்கி, ஆகஸ்ட் 26-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சிறப்பு பிரிவு 7.5% இடஒதுக்கீடு கலந்தாய்வு ஜூலை 7 முதல் தொடங்கி ஜூலை 8 வரை நடைபெற உள்ளது. சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 9 முதல் ஜூலை 11 வரை நடத்தப்படும். பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 14 முதல் தொடங்கி ஆகஸ்ட் 19 வரை நடைபெறும். துணை கலந்தாய்வு ஆகஸ்ட் 21 முதல் 23 வரையும், எஸ்சி, எஸ்சிஏ பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 25 முதல் 26 வரை நடைபெறும். இந்தாண்டு கலந்தாய்வு ஆகஸ்ட் 26 தேதியுடன் நிறைவு அடைகிறது.