பொறியியல் படிப்புகளில் பெண்களுக்கு உகந்த படிப்புகள் எவை? எந்த படிப்பில் பெண்களுக்கு அனுமதி இல்லை போன்ற முக்கிய தகவல்களை இப்போது பார்ப்போம்.
பெண்கள் எந்த பிரான்ச்களை எடுத்துப் படிக்கலாம் என கல்வியாளர் ரமேஷ் பிரபா தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், இன்றைய காலக்கட்டத்தில் ஆண்களுக்கான பிரான்ச்கள், பெண்களுக்கான பிரான்ச்கள் என எதுவும் இல்லை. ஒரு காலத்தில் மெக்கானிக்கல் சார்ந்த படிப்புகளில் பெண்கள் சேராத நிலை இருந்தது. 25 வருடங்களுக்கு முன்னர் தொழிற்சாலைகளில் பெண்கள் பணியாற்றுவது அரிது. குறிப்பாக மெக்கானிக்கல் உள்ளிட்ட உற்பத்தி சார்ந்த தொழிற்சாலைகளில் பெண்கள் பணியாற்றுவதை காண முடியாது. எலக்ட்ரானிக்ஸ் சார்ந்த தொழிற்சாலைகள் அறிமுகமாகும் வரை கடின உழைப்பு தேவைப்படும் இடங்களில் பெண்கள் பணிபுரியாத சூழ்நிலை இருந்தது.
இதையும் படியுங்கள்: Anna University News: பி.இ, பி.டெக் படிக்க 5% தொழிற்சாலை கோட்டா; அட்மிஷன் நடைமுறை எப்படி?
இன்று அந்த நிலை மாறிவிட்டது. மெக்கானிக்கல் தொழிற்சாலைகளில் எலக்ட்ரானிக்ஸ் சார்ந்த பணிகள், மேற்பார்வை பணிகள் தற்போது அதிகரித்துவிட்டது. மேலும் பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்கபட வேண்டும் என்ற கொள்கைகளும் அனைத்து தொழிற்சாலைகளில் பெண்களை பணிபுரிய அனுமதித்துள்ளது.
இதன் காரணமாக, தற்போது கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன், எலக்ட்ரிக்கல் உள்ளிட்ட எல்ட்ரானிக்ஸ் சார்ந்த பிரிவுகளில் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. தற்போது மெக்கானிக்கல் சார்ந்த படிப்புகளிலும் பெண்கள் அதிகளவில் படித்து வருகின்றனர். ஏரோநாட்டிகல் படித்து விமானம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் பெண்கள் பணிபுரிகிறார்கள். ஆர்க்கிடெக்சர் படிப்பில் பெண்கள் எண்ணிக்கையே அதிகமாக இருக்கும். தற்போது சிவில் படிப்பிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சாஃப்ட்வேர் நிறுவனங்கள் சிறந்த கல்லூரிகளில் உள்ள சிவில், மெக்கானிக்கல் உள்ளிட்ட அனைத்து பிரிவு மாணவர்களையும் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் வேலைக்கு எடுக்கின்றன. எனவே கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தால் தான் ஐ.டி. நிறுவன வேலைக்கு போக முடியும் என்பதல்ல. சிவில், மெக்கானிக்கல் படிப்புகள் பற்றிய பெற்றோர்களின் பார்வையிலும் மாற்றம் தேவை.
இன்ஜினியரிங் படிப்புகளிலே சுரங்கம் சார்ந்த மைனிங் (Mining Engineering) இன்ஜினியரிங் படிப்பில் மட்டும் தான், பெண்களின் உடல் ரீதியான சில பிரச்சனைகளுக்காக அட்மிஷன் கிடையாது. மற்ற அனைத்து பிரான்ச்களிலும் பெண்களுக்கு அட்மிஷன் உண்டு. தொழிற்சாலை வேலைகள் மட்டும் தான் உண்டு என நினைக்க வேண்டாம். ஐ.டி துறை, ஆசிரியப் பணி உள்ளிட்ட பணிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளதால், அனைத்து துறைகளையும் பெண்கள் எடுத்து படிக்கலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil