தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு தொடங்கியுள்ளது. இந்த நிலையில், கவுன்சலிங் செயல்முறை எப்படி? ஒதுக்கீட்டில், எந்த ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் என்ன நடக்கும்? என்பது உள்ளிட்ட முக்கியமான தகவல்களை இப்போது பார்ப்போம்.
Advertisment
பொறியியல் கலந்தாய்வில் சாய்ஸ் ஃபில்லிங் செயல்முறை மிக முக்கியமான ஒன்று. இது தான் நீங்கள் படிக்க கூடிய கல்லூரியை முடிவு செய்யக்கூடியது. இவை முற்றிலும் உங்கள் விருப்ப தெரிவாக இருக்கும்பட்சத்தில், நீங்கள் அசாதாரணமாக செயல்பட்டால் முக்கிய கல்லூரிகளில் நீங்கள் விரும்பிய பாடப்பிரிவு கிடைக்காமல் போகலாம். எனவே கவனமுடன் செயல்படுங்கள். அதை விட முக்கியமானது உங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை உறுதி செய்வதா? மாற்றுவதா? அல்லது மறுப்பதா? இதில் எந்த ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் என்ன நடக்கும் என தெரியாமல், நிறைய மாணவர்கள் குழம்பியுள்ளனர்.
இந்தநிலையில் சாய்ஸ் ஃபில்லிங்-ஐ விட முக்கியமான இந்த கவுன்சலிங் செயல்முறை குறித்தும், ஒதுக்கீட்டில் எந்த ஆப்ஷனை தேர்வு செய்தால் என்ன நடக்கும் என்பது குறித்தும் கல்வி ஆலோசகர் அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ மூலம் விளக்கியுள்ளார். அதனை இப்போது பார்ப்போம்.
Advertisment
Advertisements
ஓவ்வொரு ரவுண்ட் கவுன்சலிங்-ம் 14 நாட்கள் செயல்முறையைக் கொண்டது. இதில் முதல் 3 நாட்கள் சாய்ஸ் ஃபில்லிங்-க்கு வழங்கப்படும். சாய்ஸ் ஃபில்லிங்-க்கு கல்லூரிகளை பட்டியலிடும்போது, செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயம், கல்லூரி எண் (College code number) குறித்துக் கொள்வதாகும். அந்தந்த கல்லூரிக்கு நேராக கல்லூரி எண்ணை சரியாக குறித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் ஒரு பெயரிலான கல்லூரிகள் உள்ளதால், குழப்பத்தைத் தவிர்க்க கல்லூரி எண்ணை குறித்துக் கொள்ளுங்கள். இவ்வாறு கல்லூரிகளை பட்டியலிட்டப் பிறகு அதே வரிசையில், இணையதளத்தில் முன்னுரிமை கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளை தேர்வு செய்துக் கொள்ளுங்கள். இந்த செயல்முறைக்கு உங்களுக்கு மூன்று நாட்கள் வழங்கப்படும்.
அடுத்ததாக, மூன்று நாட்கள் முடிந்த பிறகு நான்காம் நாள் காலை 10 மணிக்கு உங்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு (Tentative Allotment) வழங்கப்படும். இதனையடுத்து 4 மற்றும் 5 ஆம் நாள் என 2 நாட்கள் உங்கள் முடிவை தெரிவிக்க அவகாசம் வழக்கப்படும். இதில் 6 விருப்பங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும்.
உங்களுக்கு வழக்கப்பட்ட தற்காலிக ஒதுக்கீடு உங்களுக்கு திருப்தியாக இருந்தால், நீங்கள் ஒதுக்கீட்டை உறுதி (Accept & Join) செய்ய வேண்டும். இல்லை என்றால் உங்களுக்கான ஒதுக்கீடு ரத்து செய்யப்படும். எனவே கண்டிப்பாக ஒதுக்கீட்டை உறுதி செய்துக்கொள்ளுங்கள். இவ்வாறு ஒதுக்கீட்டை உறுதி செய்த பின்னர் நீங்கள், ஒதுக்கப்பட்ட கல்லூரிக்குச் சென்று 7 நாட்களுக்குள் கல்வி கட்டணங்களை செலுத்தி, ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும். இல்லையென்றால் உங்களுக்கான ஒதுக்கீடு ரத்தாகி விடும்.
அடுத்ததாக ஏற்றுக்கொள்கிறேன் மற்றும் மாற்ற விரும்புகிறேன் (Accept and Request for Upward movement) என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால், நீங்கள் டி.எஃப்.சி மையங்களுக்குச் சென்று 7 நாட்களுக்குள் கட்டணங்களை செலுத்த வேண்டும்.
மூன்றாவதாக, ஏற்றுக்கொள்ளவில்லை மற்றும் மாற்ற விரும்புகிறேன் (Decline & Upward) என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கலாம். இதில் கவனிக்க வேண்டியது, உங்களுக்கு கிடைத்த சாய்ஸுக்கு மேல் உள்ள கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை என்றால், நீங்கள் அடுத்த ரவுண்டுக்கு செல்வீர்கள்.
நான்காவதாக நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை (Decline & Next Round) என்பதை தேர்ந்தெடுக்கலாம். இதனால் நீங்கள் அடுத்த ரவுண்டுக்கு செல்வீர்கள்.
ஐந்தாவதாக நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை மற்றும் வேறு படிப்புக்குச் செல்ல விரும்புகிறேன் (Decline & Quit) என்பதை தேர்ந்தெடுக்கலாம்.
ஆறாவது ஆப்ஷன், உங்களுக்கு தற்காலிக ஓதுக்கீட்டில் இடம் கிடைக்கவில்லையென்றால், அடுத்த சுற்றில் தேர்ந்தெடுக்க தயாராகிறேன் என்பதை கிளிக் செய்யலாம்.
அடுத்ததாக 6-ம் நாளில் இருந்து 12-ம் நாள் வரையிலான 7 நாட்களில், முதல் இரண்டு ஆப்ஷனை தேர்ந்தெடுத்தவர்கள், மேற்கூறியவாறு கட்டணங்களைச் செலுத்த வேண்டும்.
13 ஆம் நாள் உறுதி செய்யப்படாத இடங்களை, மாற்ற விரும்புவதாக ஆப்ஷனை தேர்ந்தெடுத்த மாணவர்களின் முன்னுரிமை பட்டியலில் அந்த இடங்கள், இருந்தால் அவர்களுக்கு வழங்குவார்கள்.
14 ஆம் நாள் மீண்டும் உங்களுக்கு தற்காலிக இடஒதுக்கீடு வழங்கப்படும்.
முதல் ரவுண்ட்க்கான இடங்கள் பெரும்பாலும் அடுத்த ரவுண்டுக்கு வராது என்பதை மாணவர்கள் கவனிக்க வேண்டும். கடைசியாக உள்ள குறைவான காலி இடங்கள் வேண்டுமானால் அடுத்த ரவுண்டுக்கு வரலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil