தமிழகத்தில் பொறியியல் மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு முடிவுகள் வெளியானது. இதில், சுமார் 13,415 இடங்கள் நிரப்பப்பட்டதாக கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.
174.75 - 145.5 வரம்பில் உள்ள கட்- ஆப் மதிப்பெண்கள் பெற்ற சுமார் 22,903 மாணவர்கள் இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். இருப்பினும், 9,000க்கும் அதிகமான மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ளவில்லை.
இரண்டாம் கட்ட கலந்தாய்வு முடிவில், மாணவர்கள் சேர்கையில் பல கல்லூரிகள் திணறி வருவதாக கூறப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் பல துறைகள் காலியாகி உள்ள நிலையில், அண்ணாமலைப் பலகலைக்கழகம் பொறியியல் படிப்பிற்கான சேர்க்கை மந்தநிலையில் காணப்படுகிறது.
அண்ணா பல்கலைக்கழகம் சென்னை - காஞ்சிபுரம் வளாகம் இந்த ஆண்டு மாணவர் சேர்கையில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.
நல்ல கட்- ஆப் பெற்ற மாணவர்கள் பெரும்பாலும் ஒரு கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையை தேர்ந்தெடுத்து வருகிறார்கள். பிக் டேட்டா, செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் (Machine learning) போன்ற துறைகளை தேர்ந்தெடுக்க பெரும்பாலான மாணவர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
சென்னையில், ஜேப்பியார், செயன்ட். ஜோசப் , பிஎஸ்ஜி டெக்னாலாஜி போன்ற தனியார் கல்லூரிகளில் இடங்கள் வேகமாக நிரப்பப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு கடந்த அக்டோபர் 8ம் தேதி தொடங்கியது. இம்மாதம் 28-ஆம் தேதிவரை, நான்கு கட்டங்களாக கலந்தாய்வு நடைபெற உள்ளது. ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 873 மாணவ, மாணவிகள் இதில் கலந்து கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
மாணவர்கள் tneaonline.org என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் கலந்தாய்வு முடிவுகளை பெற்றுக் கொள்ளலாம். முதற் கட்ட கலந்தாய்வு பட்டியல் கடந்த 16ம் தேதி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
முதற்கட்ட கலந்தாய்வில் 4753 மாணவர்கள் கலந்து கொள்ள வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாம் கட்ட கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது. கட்- ஆப் மதிப்பெண் 145- 111.75 என்ற வரம்பில் உள்ள மாணவர்கள் 3-ம் கட்ட கலந்தாய்வுக்கு அழைக்கப்படுகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil