டிஎன்பிஎஸ்சி தேர்வில் (குரூப்-1, குரூப்-2, குரூப்-4) அன்றாட பொது நிகழ்வுகளில் இருந்து அதிகாமாக கேள்விகள் கேட்பது வழக்கம் . மேலும், குரூப் II-ஏ தேர்வின் தரத்தையும் தற்போது அதிகப்படுத்தியுள்ளதால் பொது நிகழ்வுகளைப் பற்றிய நுண்ணறிவு மிகவும் அவசியமாகிறது.
தேர்வுகளுக்கு முக்கிய நடப்பு நிகழ்வு தலைப்புகளை சிலவற்றை உங்களுக்கு தருகிறோம்.
- பாதுகாப்பு படைகளின் தலைமைத் தளபதி
- ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் முகுந்த் நாரவனே நியமனம்
- உலக வங்கியின் தொழில் தொடங்குவதற்கு உகந்த நாடுகள் பற்றிய ஆய்வறிக்கை 2020-ல் இந்தியா முன்னேற்றம்
- 107-வது இந்திய அறிவியல் மாநாடு
- இந்திய ரயில்வேயை அமைப்பு ரீதியாக மாற்றியமைத்து மறுசீரமைக்க ஒப்புதல்
வரும் நாட்களில் இன்னும் கூடுதலாக எளிமையான பொது நிகழ்வு தொகுப்புகளை உங்களுக்கு வழங்க தயாராக இருக்கிறோம்.
1. பாதுகாப்பு படைகளின் தலைமைத் தளபதி என்ற நான்கு நட்சத்திர ஜென்ரல் பதவியிடத்தை உருவாக்கியது:
பாதுகாப்பு படைகளின் தலைமைத் தளபதி, பாதுகாப்பு அமைச்சகத்தில் புதிதாக உருவாக்கப்படவுள்ள ராணுவ விவகாரங்கள் துறையின் தலைவராகவும், செயலாளராகவும் செயல்படுவார்
பாதுகாப்பு படைகளின் தலைமைத் தளபதி தலைமையிலான ராணுவ விவகாரங்கள் துறை கீழ்க்கண்ட விஷயங்களை கவனிக்கும்:
- ராணுவம், கப்பற்படை, விமானப்படை ஆகிய நாட்டின் ஆயுதப்படைகள்.
- ராணுவத் தலைமையிடம், கப்பற்படைத் தலைமையிடம், விமானப்படை தலைமையிடம், பாதுகாப்பு அதிகாரிகள் தலைமையிடம் ஆகியவற்றைக் கொண்ட பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த தலைமையிடம்.
- பிராந்திய ராணுவம்
- ராணுவம், கப்பற்படை, விமானப்படை சம்பந்தப்பட்ட பணிகள்.
- மூலதனப் பொருட்கள் கொள்முதல் தவிர, விதிகள் மற்றும் நடைமுறைகளுக்கு ஏற்ப, முப்படைகளுக்கான தனிப்பட்ட கொள்முதல்கள்.
- இவை தவிர, ராணுவ விவகாரங்கள் துறை (புதிதாக உருவாக்கப்பட்ட ) கீழ்க்கண்ட விஷயங்களையும் கவனிக்கும்.
முப்படைகளுக்கான கொள்முதல், பயிற்சி, பணியாளர் நியமனம் ஆகியவற்றில் கூட்டுத் திட்டமிடல், தேவைகளை ஒருங்கிணைத்தல் அடிப்படையில் கூட்டு நடைமுறையை மேம்படுத்துதல்.
ஆதாரங்களை அதிக அளவு பயன்படுத்தும் வகையில் கூட்டு செயல்பாட்டு படைப் பிரிவுகளை உருவாக்குதல் உள்ளிட்ட ராணுவப் பிரிவுகள் மறுசீரமைப்புக்கு வசதி ஏற்படுத்தி, போர் நடவடிக்கைகளில் கூட்டுத் தன்மையை ஏற்படுத்துதல்.
முப்படைகளில், உள்நாட்டுக் கருவிகள் பயன்பாட்டை மேம்படுத்துதல்.
மேலும், விவரங்களுக்கு Explained : முப்படை தலைமைத் தளபதியின் அதிகாரம் என்ன?
பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி, ராணுவ விவகாரங்கள் துறை தலைவராக செயல்படுவதுடன், முப்படைத் தளபதிகள் குழுவுக்கு நிரந்தரத் தலைவராகவும் இருப்பார் (தெரிந்து கொள்வது மிக முக்கியம் ). அனைத்து முப்படை சார்ந்த விஷயங்களில் பாதுகாப்பு அமைச்சருக்கு முதன்மை ராணுவ ஆலோசகராகவும் அவர் செயல்படுவார் (மிக முக்கியம் ). முப்படைத் தளபதிகள் தங்கள் படைப்பிரிவுகள் மட்டுமே சார்ந்த விஷயங்களில், பாதுகாப்பு அமைச்சருக்கு தொடர்ந்து ஆலோசனைகள் வழங்கி வருவார்கள். அரசியல் தலைமைக்கு பாகுபாடற்ற ஆலோசனை வழங்க வேண்டும் என்பதற்காக, பாதுகாப்பு படைகளின் தலைமைத் தளபதி, முப்படைத் தளபதிகள் மீதான அதிகாரம் உள்ளிட்ட எவ்வித ராணுவ படைத்தலைவர் அதிகாரத்தையும் பயன்படுத்தமாட்டார் (தெரிந்து கொள்வது மிக முக்கியம் ).
2. ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் முகுந்த் நாரவனே நியமனம்
ராணுவ தளபதி ஜெனரல் பிபின் ராவத், இம்மாதம் 31 ஆம் தேதியன்று ஓய்வுபெறுவதையொட்டி, புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் முகுந்த் நாரவனேயை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வரும் 31 ஆம் தேதி பிற்பகல் நாரவனே தமது புதிய பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்.
சுமார் 40 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிய இவர், தனது பள்ளிப் படிப்பை புனேயிலும், ராணுவ கல்வியில் முதுநிலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர், வடகிழக்குப் பிராந்தியம், கிழக்குப்பிராந்தியம் ஆகிய பகுதிகளிலும் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதிப்படையிலும் இவர் இடம்பெற்றிருந்தார். மியான்மரில் உள்ள இந்திய தூதரகத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
3.உலக வங்கியின் தொழில் தொடங்குவதற்கு உகந்த நாடுகள் பற்றிய ஆய்வறிக்கை 2020-ல் இந்தியா முன்னேற்றம்.
உலகில் உள்ள 190 நாடுகளில் 2019-ல் 77 ஆவது இடத்தில் இருந்த இந்தியா 13 இடங்கள் முன்னேறி, தற்போது 63 ஆவது இடத்திற்கு வந்துள்ளது.
சர்வதேச அளவில் சிறந்த நடைமுறைகளை எட்டியுள்ள இந்தியா முன்னேற்றத்திற்கான 10 புள்ளிகளில் 7 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
முன்னேற்றத்தை அடைந்த நாடுகளில் தொடர்ந்து 3-ஆவது முறையாக முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளது.
4. 107-வது இந்திய அறிவியல் மாநாடு
107-வது இந்திய அறிவியல் மாநாட்டை, பிரதமர் திரு.நரேந்திர மோடி, பெங்களூரு வேளாண் அறிவியல் பல்கலைக்கழக வளாகத்தில் அன்று (03.01.2020) பிரதமர் தொடங்கி வைத்தார்.
“அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்: ஊரக வளர்ச்சி” என்ற 107-வது இந்திய அறிவியல் மாநாட்டின் மையக் கருத்து குறித்து சுட்டிக்காட்டிய பிரதமர், அறிவியல் & தொழில்நுட்பம் மூலமே, தேவைப்படும் மக்களை அரசுத் திட்டங்கள் சென்றடைவதாகவும் கூறினார்.
புதுமை கண்டுபிடிப்பு பட்டியலிலும் இந்தியா 52-வது இடத்திற்கு முன்னேறியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். கடந்த 50 ஆண்டுகளில் இருந்ததை விட அரசுத் திட்டங்கள் மூலம், கடந்த 5 ஆண்டுகளில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஏராளமான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் அவர் எடுத்துரைத்தார்.
5. இந்திய ரயில்வேயை அமைப்பு ரீதியாக மாற்றியமைத்து மறுசீரமைக்க ஒப்புதல் :
ரயில்வேத் துறையில் தற்போதுள்ள 8 ஏ பிரிவு பணிகளை ஒருங்கிணைத்து, இந்திய ரயில்வே மேலாண்மைப் பணி (IRMS) என்ற பெயரில் மத்திய பணியாக மாற்றப்படும்.
இந்தப் பணிகள் ஒருங்கிணைப்பு, துறை ரீதியான ஆதிக்கத்திற்கு முடிவுகட்டுவதுடன் ரயில்வேத்துறை சுமூகமாக செயல்படுவதை ஊக்குவித்து, முடிவுகள் மேற்கொள்வதை விரைவுபடுத்துவதோடு, ரயில்வேத் துறைக்கு உகந்த கண்ணோட்டத்தை உருவாக்குவதுடன், பகுத்தறிவு ரீதியான முடிவுகள் மேற்கொள்வதையும் ஊக்குவிக்கும்.
ரயில்வே வாரியம் இனி துறை ரீதியான பணிகளை மேற்கொள்ளும் அமைப்பாக இருக்காது என்பதோடு, குறைந்த அளவிலான கட்டமைப்பைக் கொண்ட அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்படும்.
ரயில்வே வாரியத் தலைவரை தலைமை செயல் அதிகாரியாகவும் 4 உறுப்பினர்கள் மற்றும் சில சுதந்திரமான உறுப்பினர்களை கொண்டதாக ரயில்வே வாரியம் இருக்கும்.
ரயில்வே பணிகள் ஒருங்கிணைப்பு, இத்துறையை மாற்றியமைக்க நியமிக்கப்பட்ட பிரகாஷ் தாண்டன், ராகேஷ் மோகன், சாம் பிட்ரோடா மற்றும் விவேக் தேப்ராய் குழுக்களின் பரிந்துரை அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படவுள்ளது.
2019 டிசம்பர் 7 & 8 ஆம் தேதிகளில் நடைபெற்ற “பரிவர்த்தன் சங்கோஸ்தி” என்ற பெயரிலான 2 நாள் மாநாட்டில் கலந்து கொண்ட ரயில்வே அதிகாரிகளின் கருத்தொற்றுமை மற்றும் ஒட்டுமொத்த ஆதரவின் படியே இந்த சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகிறது.
பணிகள் ஒருங்கிணைப்புக்கான நடைமுறைகள் மத்திய பணியாளர் நலத்துறையுடன் கலந்தாலோசித்து மேற்கொள்ளப்படும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.