டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு காலியிடங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை ஜூன் 9 ஆம் தேதி நடத்தியது. மொத்தம் 6244 பணியிடங்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வனக் காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழகம் முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் மொத்தம் 15.8 லட்சம் பேர் குரூப் 4 தேர்வை எழுதியுள்ளனர்.
இந்தநிலையில், ஜூன் 19 ஆம் தேதி குரூப் 4 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, குரூப் 4 தேர்வு முடிவுகள் வருகின்ற அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில், குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டன. இதன்மூலம் குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 6724 ஆக உயர்ந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை போதுமானது அல்ல என தேர்வர்கள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும் காலியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்கள் மீண்டும் அதிகரிக்கப்பட்டன. புதிதாக 2208 காலியிடங்கள் சேர்க்கப்பட்டு, தற்போது குரூப் 4 தேர்வுக்கு மொத்தமாக 8932 காலியிடங்கள் உள்ளன.
இருப்பினும் குரூப் 4 காலியிடங்களை 10000 வரையாவது அதிகரிக்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர். காலியிடங்களை உயர்த்த வேண்டும் என அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வந்தன.
இந்த நிலையில் குரூப் 4 தேர்வு காலியிடங்கள் தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள தெரிவித்திருப்பதாவது;
“ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு தொகுதி IV, 2024 இல் போதுமான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதா? என குறைதீர் அழைப்பு மையம் வாயிலாக கேள்வி எழுப்பப்படுகிறது.
2022 இல் நடைபெற்ற தொகுதி 4 தேர்வின் மூலம் 2001-21, 2021-22, 2022-23, ஆகிய மூன்று நிதி ஆண்டுகளுக்கான 10,139 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அதாவது சராசரியாக ஒரு நிதியாண்டிற்கு 3380 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டன.
2024 இல் நடைபெற்ற குரூப் 4 தேர்வில் 2023-24, 2024-25 ஆகிய இரண்டு நிதி ஆண்டுகளுக்கான 8,932 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது ஒரு நிதியாண்டிற்கு 4466 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
எனவே 2024-ம் ஆண்டு குரூப் 4 தேர்வின் மூலம் சரசரியாக ஒரு நிதி ஆண்டிற்கு கூடுதலாக 1086 (4466-3380) காலிப்பணியிடங்கள் ஆக மொத்தம் 2172 காலிப்பணியிடங்கள் கூடுதலாக நிரப்பப்பட உள்ளன.
எனவே, சமூக வலைத்தளங்களில் காலிப்பணியிடங்கள் தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது." இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
— TNPSC (@TNPSC_Office) October 13, 2024
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.