TNPSC announce link aadhaar to OTR is mandatory: டிஎன்பிஎஸ்சி நிரந்தர பதிவெண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசு பணிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகின்றது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முதல் குரூப் 1 வரையிலான தேர்வுகளையும் பிற துறை சார் தேர்வுகளையும் நடத்திவருகிறது. இதனிடையே பொதுத் துறை நிறுவனங்களுக்கான தேர்வுகளையும் டிஎன்பிஎஸ்சி நடத்தும் என அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு எழுதும் தேர்வர்கள் தங்கள் டிஎன்பிஎஸ்சி நிரந்தர பதிவு எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் காலத்திற்கேற்ப தேவையான மாற்றங்களை அறிமுகம் செய்து அவற்றை நடைமுறைப்படுத்தி வருகிறது. மேலும், தெரிவு முறைகளில் வெளிப்படைத் தன்மை மற்றும் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் பொருட்டும், போட்டி தேர்வுகளை விரைவாக நிறைவு செய்யும் வகையிலும், அவ்வப்போது சீர்திருத்தங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில், ஒருமுறை நிரந்தரப்பதிவு கணக்கு வைத்திருக்கும் அனைத்து தேர்வர்களும் தங்களது ஆதார் குறித்த விவரங்களை 28.02.2022க்குள் தவறாமல் இணைத்து எதிர்காலத்தில் தேர்வாணையத்தால் வெளியிடப்படும், அறிவிக்கைகளின் அடிப்படையில் தனது ஒருமுறை நிரந்தரப் பதிவு கணக்கு மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்கள் வரும் 28-ம் தேதிக்குள் டிஎன்பிஎஸ்சி நிரந்தர பதிவெண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளுங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil