அரசு உதவி வழக்கறிஞர் பணிக்கான தேர்வு முறையில் முதல்நிலைத் தேர்வில் கூடுதலாக பொது அறிவுத் தாள் தேர்வும், முதன்மைத் தேர்வில் கூடுதலாக கட்டாய தமிழ் மொழித் தகுதித் தாள் தேர்வும் இடம்பெறும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையச் செயலாளர் ச.கோபாலசுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு பொதுப்பணியில் உள்ள அரசு உதவி வழக்கறிஞர் (கிரேடு-2) பதவிக்கான புதிய தேர்வு திட்டம் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய தேர்வுத் திட்டத்தின்படி, முதல்நிலைத் தேர்வில் சட்டம் தொடர்பான ஒரு தாளுடன் கூடுதலாக பொது அறிவு தாள் சேர்க்கப்பட்டுள்ளது.
அதேபோல், முதன்மைத் தேர்வில் ஏற்கெனவே உள்ள சட்டம் தொடர்பான 4 தாள்களுடன் கூடுதலாக கட்டாய தமிழ்மொழி தகுதித் தாள் தேர்வு சேர்க்கப்பட்டுள்ளது. சட்டம் தொடர்பான தாள்களைப் போன்று கட்டாய தமிழ் மொழி தேர்வும் விரிவாக விடையளிக்கும் வகையில் அமைந்திருக்கும். இது தகுதித் தாள் என்பதால் தேர்ச்சி பெற்றாலே போதும். இதில் பெறும் மதிப்பெண் மெரிட் பட்டியலுக்கு சேர்க்கப்படாது.
முன்னதாக, டி.என்.பி.எஸ்.சி வெளியிட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணையின்படி, அரசு உதவி வழக்கறிஞர் (கிரேடு-2) பதவியில் 50 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு செப்டம்பர் 13 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. இதற்கான முதல்நிலைத் தேர்வு டிசம்பர் 14 ஆம் தேதி நடைபெறும் என அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“