தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2024 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு வேலை என்பது சிறப்பானதாக கருதப்பட்டு வருகிறது. இதற்காக லட்சக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர். பெரும்பாலான தமிழக இளைஞர்களின் கனவு அரசு வேலை தான். இந்த அரசு வேலை கனவை நனவாக்குவது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள இடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வுகளை நடத்தி நிரப்பி வருகிறது. இதில் குரூப் 1 முதல் குரூப் 8 வரையிலான தேர்வுகளும், இதர துறை சார்ந்த தேர்வுகளும் நடத்தப்படுகிறது. மேலும் தற்போது தமிழக அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களுக்கான ஆட்சேர்ப்பு டி.என்.பி.எஸ்.சி வழியாக செய்யப்படுகிறது.
இந்தநிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. மொத்தம் 19 வகையான தேர்வுகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி குரூப் 4 தேர்வு அறிவிப்பு 2024 ஜனவரியில் வெளியிடப்படும். தேர்வு ஜூன் மாதம் நடைபெறும். குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்கள் எண்ணிக்கை பின்னர் அறிவிக்கப்படும்.
1264 வனக் காவலர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, தேர்வு ஜூன் மாதம் நடைபெறும்.
குரூப் 1 தேர்வு அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, தேர்வு ஜூலை மாதம் நடைபெறும். குரூப் 1 தேர்வு 65 பணியிடங்களுக்கு நடத்தப்படும்.
அடுத்தப்படியாக ஒருங்கிணைந்த பொறியியல் துணை சேவைகள் பிரிவில் காலியாக இருக்கும் 467 இடங்களுக்கு, ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு ஜூலையில் தேர்வு நடைபெறும்.
118 வனவர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு மே மாதம் வெளியிடப்படும். தேர்வு ஆகஸ்ட் மாதம் நடத்தப்படும்.
குரூப் 2, 2ஏ தேர்வு 1294 பணியிடங்களுக்கு நடத்தப்படும். தேர்வு அறிவிப்பு மே மாதம் வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் மாதம் தேர்வு நடைபெறும்.
ஒருங்கிணைந்த அறிவியல் பணிகளில் 96 இடங்களுக்கும், புள்ளியியல் சார்நிலை பணிகளில் 23 இடங்களுக்கும் ஜூன் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு செப்டம்பர் மாதம் தேர்வு நடத்தப்படும்.
ஒருங்கிணைந்த பொறியியல் சேவைகள் பிரிவில், 47 பணியிடங்களுக்கு அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிப்பு வெளியாகும். தேர்வு 2025 ஜனவரி மாதம் நடத்தப்படும்.
இதுதவிர, சட்டம், தொல்லியல், உடற்கல்வி, நூலகம், கணக்கியல் மற்றும் சிவில் நீதிபதிகளுக்கான தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“