தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2025 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு வேலை என்பது சிறப்பானதாக கருதப்பட்டு வருகிறது. இதற்காக லட்சக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர். பெரும்பாலான தமிழக இளைஞர்களின் கனவு அரசு வேலை தான். இந்த அரசு வேலை கனவை நனவாக்குவது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள இடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வுகளை நடத்தி நிரப்பி வருகிறது. இதில் குரூப் 1 முதல் குரூப் 8 வரையிலான தேர்வுகளும், இதர துறை சார்ந்த தேர்வுகளும் நடத்தப்படுகிறது. மேலும் தற்போது தமிழக அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களுக்கான ஆட்சேர்ப்பு டி.என்.பி.எஸ்.சி வழியாக செய்யப்படுகிறது.
இந்தநிலையில் 2025 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தற்போது 7 வகையான தேர்வுகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
குரூப் 1 தேர்வு அடுத்த ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி நடைபெறும். குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும்.
குரூப் 4 தேர்வு அடுத்த ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி நடைபெறும். குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியாகும்.
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு பதவிகள்) அடுத்த ஆண்டு ஜூலை 25 ஆம் தேதி முதல் தொடங்கும். இந்த தேர்வுக்கான அறிவிப்பு மே 5 ஆம் தேதி வெளியாகும்.
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கான (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) அறிவிப்பு அடுத்த ஆண்டு மே 21 ஆம் தேதி வெளியாகும். தேர்வுகள் ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் தொடங்கும்.
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கான (பட்டயம்/ தொழிற்பயிற்சி தரம்) அறிவிப்பு அடுத்த ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி வெளியாகும். தேர்வுகள் ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் தொடங்கும்.
குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு அடுத்த ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெறும். குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு குறித்த அறிவிப்பு அடுத்த ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி வெளியாகும்.
குரூப் 5ஏ தேர்வு அடுத்த ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறும். குரூப் 5ஏ தேர்வு குறித்த அறிவிப்பு அடுத்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி வெளியாகும். இவ்வாறு தேர்வாணையம் அறிவித்துள்ளது.
அதேநேரம் ஆண்டுத் திட்டத்தில் தேர்வுகள் சேர்க்கவோ அல்லது நீக்கவோ செய்யப்படலாம். மேலும், காலியிடங்களின் எண்ணிக்கை அறிவிக்கையில் வெளியிடப்படும் என்றும் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“