டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்கள், வரும் செப்டம்பர் 6ம் தேதிக்குள் தங்கள் கல்விச்சான்றிதழ்களின் நகல்களை, டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக, டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளன. கால்நடை மருத்துவ நிறுவனத்தில் ஆராய்ச்சி உதவியாளர் பணி, மருந்துகள் சோதனை ஆய்வகத்தில் டிரக் இன்ஸ்பெக்டர் மற்றும் ஜூனியர் அனலிஸ்ட் பணி, அருங்காட்சியக துறையில் பொறுப்பாளர் (curator) பணி, அசிஸ்டண்ட் ஜியாலஜிஸ்ட் மற்றும் அசிஸ்டெண்ட் ஜியோகெமிஸ்ட் பணியிடங்களுக்கான தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் சான்றிதழ்களை, டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
நாளை (ஆகஸ்ட் 29)முதல் செப்டம்பர் 6ம் தேதிக்குள், விண்ணப்பதாரர்கள் தங்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.விண்ணப்பதாரர்கள், TACTV நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் இ-சேவா மையங்களை, தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.