தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தேர்வுகளை திட்டமிட்டபடி நடத்தி முடிவுகளை விரைவில் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தேர்வாணையத்தின் புதிய தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் 27 ஆவது தலைவராக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி எஸ்.கே பிரபாகர் இன்று பதவி ஏற்று கொண்டார். பதவியேற்றதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.கே.பிரபாகர், தமிழ்நாட்டில் உள்ள பல லட்சம் மாணவர்கள், அரசு தேர்வுகளில் சேர வேண்டும் என்ற கனவுடன் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கு மிகுந்த அக்கறையுடன் தயார் செய்து படித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த மாணவர்கள் தேர்வுகளை நல்லபடியாக எழுதும் வகையில், அரசு பணியாளர் தேர்வாணையம் ஒரு கால அட்டவணையை தயார் செய்து தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த தேர்வுகள், திறமையாகவும், நேர்மையாகவும் நடத்தப்படும் என்பதை தலைவராக நான் உறுதி செய்வேன்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகள் மட்டும் அல்லாமல் பிற தேர்வுகளையும் மாணவர்கள் எழுதி வருகின்றனர். இரு தேர்வு தேதிகளும் ஒரே நாளில் இல்லாதவாறு ஒருங்கிணைந்து செயல்படுவோம். தமிழ்நாடு அரசு பணியில் சேர வேண்டும் என்ற ஆர்வம் உள்ள மாணவர்களின் கனவுகள் நிறைவேறும் வகையில் அனைத்து பணிகளையும் மேற்கொள்வோம்.
போட்டித் தேர்வுகளை எழுதுபவர்களுக்குத் தேர்வு முடிவுகள் விரைவில் வந்தால் தான், அந்த பணியில் சேர்வதா? அல்லது வேறு முயற்சி எடுப்பதா? என்பதை முடிவு எடுக்க முடியும். தேர்வு எழுதிய பின்னர் தேர்வு முடிவுகள் வெளியாகும் காலத்தில் உள்ள இடைவெளியைக் குறைக்க நிச்சயம் நடவடிக்கை எடுப்போம். தேர்வுகள் குறிப்பிட்ட கால அட்டவணையில் நடப்பதற்கும், விரைவில் தேர்வு முடிவுகளை வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பெரிய புகார்கள் எதுவும் இல்லாமல் தரமான முறையில் தேர்வுகளை நடத்தி வருகிறது. தேர்வு முறைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகளை மேம்படுத்துவது தொடர்பாக பலரும் நிறைய ஆலோசனைகளை வழங்கி கொண்டு வருகிறார்கள். அரசு பணியாளர் தேர்வாணையம் என்பது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கக்கூடிய ஒரு அமைப்பு. இதில் பல ஆண்டுகளாக பல்வேறு முறை முன்னேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு நல்ல நிலையில் தற்போது உள்ளது. இதிலும் இன்னும் சிறப்பாக செய்வதற்காக செய்தியாளர்களாகிய உங்களிடமோ அல்லது தேர்வு எழுதும் மாணவர்களிடமோ இருந்து வந்தால் அதனை நிச்சயம் பரிசீலிப்போம். குறைகளைக் களையவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு எஸ்.கே பிரபாகர் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“