/indian-express-tamil/media/media_files/2025/07/12/tnpsc-head-2025-07-12-18-00-34.jpg)
2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணை டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்கள் தேர்வுகள் நடத்தி பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள். இதில் பல்வேறு பதவிகளுக்கு பல்வேறு வகையிலான தேர்வுகள் நடத்தப்படும். குறிப்பாக குரூப் 1, 2, 4 தேர்வுகள் முதல் தொழில்நுட்ப பணி தேர்வுகள் என பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், ஓராண்டில் எந்தெந்த பதவிகளுக்கு, எப்போது போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என்ற விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வு அட்டவணையை (Annual Planner) டி.என்.பி.எஸ்.சி ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. இந்த அட்டவணையில் போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியாகும் நாள், எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி அல்லது மாதம், தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அல்லது மாதம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம்பெற்றிருக்கும். இதனால், அரசு பணியில் சேர விரும்புவோர் முன்கூட்டியே தேர்வுக்கு திட்டமிட்டு தயாராகவதற்கு இந்த வருடாந்திர தேர்வு அட்டவணை உதவிக்கரமாக உள்ளது.
இந்நிலையில், 2026 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என்று தேர்வாணையத் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்ததாவது; 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையை கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட்டோம். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணை தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த தேர்வு அட்டவணையை டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளோம். என்னென்ன தேர்வுகள் நடத்தப்படும் என்பது அட்டவணை தயாரிப்பின் இறுதி கட்டத்தில்தான் தெரியவரும்.
டி.என்.பி.எஸ்.சி-யை பொருத்தவரை குறித்த காலத்தில் தேர்வு நடத்தி குறித்த காலத்தில் எந்தவித புகாருக்கும் இடம் அளிக்காத வகையில் துல்லியமாக தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. கடந்த ஜூலை மாதம் நடந்த ஒருங்கிணைந்த குருப் 4 தேர்வின் முடிவுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி அக்டோபர் மாதம் வெளியிடப்படும். பல்வேறு துறைகளில் இருந்து காலியிடங்கள் வந்த வண்ணம் உள்ளன. தேர்வு முடிவு வெளியிடப்பட்டு கலந்தாய்வு தொடங்குவது வரை காலிப் பணியிடங்களை சேர்க்கலாம். எனவே, காலியிடங்களின் எண்ணிக்கை நிச்சயம் அதிகரிக்கும்.
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வில் (நேர்காணல் அல்லாத பதவிகள்) உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு 2) நேரடி நியமனத்தில் இணையான கல்வித்தகுதி தொடர்பாக சுற்றுலா துறையிடம் சில விளக்கங்கள் கேட்டுள்ளோம். எனவே, விரைவில் அந்த பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு பணிகள் நடத்தப்படும்.” இவ்வாறு அவர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.