குரூப் 4 தேர்வு விடைத்தாள் கொண்டு சென்றதில் குளறுபடி இல்லை; டி.என்.பி.எஸ்.சி அறிக்கை

குரூப் 4 தேர்வு முடிந்த பின்னர் விடைத்தாள்கள் கொண்டு சென்றதில் எந்த குளறுபடியும் இல்லை; சேலத்தில் அட்டைபெட்டைகள் சேதமடைந்ததாக வெளியான செய்திக்கு டி.என்.பி.எஸ்.சி விளக்கம்

குரூப் 4 தேர்வு முடிந்த பின்னர் விடைத்தாள்கள் கொண்டு சென்றதில் எந்த குளறுபடியும் இல்லை; சேலத்தில் அட்டைபெட்டைகள் சேதமடைந்ததாக வெளியான செய்திக்கு டி.என்.பி.எஸ்.சி விளக்கம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tnpsc exam

தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உட்பட 3,935 காலிப்பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு தமிழ்நாடு முழுவதும் கடந்த 12 ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. அனைத்து மாவட்டங்களிலும் 4,922 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் வினாத்தாள் விநியோகம் செய்யப்பட்டு குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இதில், 10 லட்சம் பேர் பங்கேற்று தேர்வை எழுதினர். குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்திற்குள் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார். 

Advertisment

இதற்கிடையில், குரூப் 4 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சேலம் மாவட்டத்தில் இருந்து அனுப்பப்பட்ட குரூப்-4 தேர்வு விடைத்தாள்கள் உரிய முறையில் பாதுகாப்பில்லாத வகையில் கொண்டு செல்லப்பட்டதாகவும் அட்டைப்பெட்டியில் ஆங்காங்கே கிழிக்கப்பட்டு, முறையாக சீலீடப்படவில்லை என்றும் புகார் எழுந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் விடைத்தாள்கள் திருத்தப்பட்டதாகவும் சர்ச்சை வெடித்திருக்கிறது. இதனால் முறைகேடுகள் நடந்திருப்பதாக தேர்வர்களால் கருத்து தெரிவித்த நிலையில் டி.என்,பி.எஸ்.சி அதற்கு மறுப்பு தெரிவித்து உள்ளது.

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது;

Advertisment
Advertisements

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்.07/2025, வாயிலாக நேரடி நியமனத்திற்கு ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு -IV (தொகுதி - IV) - க்கான தேர்வுகள் கடந்த 12.07.2025-இல் மாநிலம் முழுவதிலும் 4,922 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இதில் 13.89,238 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்ததில் 11,48,019 விண்ணப்பதாரர்கள் தேர்வினை எழுதினர். தேர்வுகள் முடிந்து அனைத்து விடைத்தாள்களும் உரிய பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி, சீலிடப்பட்ட இரும்புப்பெட்டிகளில் (Stainless Steel Boxes) தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்திற்கு 13.07.2025 காலை வரை பாதுகாப்பாக வரப்பெற்றுள்ளன. இதில் எவ்விதமான குளறுபடிகளும் நிகழவில்லை.

இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் கடந்த 12.07.2025 மு.ப. அன்று நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு IV (தொகுதி - IV) தேர்வு தொடர்பான விடைத்தாள்கள் முறையாக சீலிடப்படாமல் அட்டைப்பெட்டிகளில் இருந்தது என பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் இன்று செய்திகள் வந்துள்ளன. சேலம் மாவட்ட விடைத்தாள்களும் சீலிடப்பட்ட இரும்புப்பெட்டிகளில் (Stainless Steel Boxes) தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்திற்கு 13.07.2025 அதிகாலை பாதுகாப்பாக வரப்பெற்றுள்ளன. விடைத்தாள்கள் அட்டைப்பெட்டிகளில் கொண்டுவரப்பட்டன என்ற செய்திகளில் உண்மை இல்லை.

ஓ.எம்.ஆர் விடைத்தாள்கள் அனைத்தும் இரும்புப்பெட்டிகளில் (Stainless Steel Boxes) வைத்து சீலிடப்பட்டு அவை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்திற்கு வந்து சேரும் வரை 24x7 முறையில் நேரலையாக கண்காணிக்கப்பட்டு அவற்றின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டு சி.சி.டி.வி கேமரா மூலமாகவும் கண்காணிக்கப்படுகிறது. எந்த ஒரு விடைத்தாளும் செய்தி ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டவாறு அட்டைப் பெட்டிகளில் கொண்டு வரப்படுவது இல்லை.

பத்திரிகைச் செய்திகளில் கொடுக்கப்பட்டுள்ள புகைப்படங்கள், பயன்படுத்தப்பட்ட காலி அட்டைப்பெட்டிகள் மற்றும் தேர்வுக்கு உபயோகப்படுத்தப்பட்ட பின்னர் உபரியாக இருந்த வினாத்தாள்கள் அடங்கிய அட்டைப் பெட்டிகள் போன்றவையாகும். இவை தேர்வில் பயன்பட்டது போக மீதமிருந்த வினாத்தாள்கள் என்பதால், வழக்கமான நடைமுறையின்படி அந்தந்த மாவட்டங்களிலேயே வைக்கப்பட்டிருக்கும்.

தேர்வு நடைமுறைகள் முடிந்த பின்னர் இவை மாவட்ட கருவூலகங்கள் மூலமாக மாவட்ட மைய நூலகங்கள் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இது குறித்து தேர்வாணையம் ஏற்கனவே விரிவான நடைமுறையினை வெளியிட்டு பின்பற்றி வருகிறது.

எனவே. 12.07.2025 மு.ப. அன்று நடந்து முடிந்த ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு IV (தொகுதி - IV) தேர்வு தொடர்பான விடைத்தாள்கள் முறையாக சீலிடப்படாமல் அட்டைப்பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தன என்று வரும் பத்திரிகை மற்றும் இதர ஊடக செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவையாகும்.

வினாத்தாளுக்கான உத்தேச விடைகள் தேர்வாணைய இணையதளத்தில் 21.07.2025 மாலை 05.00 மணியளவில் வெளியிடப்பட்டு ஆட்சேபணைகள் ஏதுமிருப்பின் தெரிவிப்பதற்காக ஒரு வார கால அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அனைத்து தொடர் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு முன்னரே தேர்வாணையத்தால் தெரிவித்தபடி இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் மூன்று மாத காலத்திற்குள் வெளியிடப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tnpsc Group4

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: