TNPSC exams revised syllabus and model question papers: TNPSC தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் மற்றும் தேர்வு முறை குறித்த விவரங்கள் தேர்வாணையத்தின் இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Advertisment
தமிழக அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC), போட்டித் தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை அந்த பணியிடங்களில் நிரப்பி வருகிறது. TNPSC யானது அரசுத்துறைகளில் நான்காம் நிலை பணியிடங்கள் முதல் முதல் நிலை பணியிடங்கள் வரை நிரப்பி வருகிறது. அதாவது குரூப் 1, குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் மூலம் அனைத்து விதமான பணியிடங்களையும் நிரப்பி வருகிறது. மேலும் பிற தொழில்நுட்ப பணியிடங்கள், குறிப்பிட்ட துறைக்களுக்கான சம்பந்தப்பட்ட படிப்பு தேவைப்படும் பணியிடங்களுக்கும் தேர்வுகளை நடத்தி வருகிறது.
இந்தநிலையில் கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவல் காரணமாக, TNPSC திட்டமிட்டப்படி தேர்வுகளை நடத்த முடியவில்லை. தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், பல்வேறு பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. மேலும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்வுகள் குறித்த ஆண்டு திட்டத்தையும் வெளியிட்டுள்ளது.
Advertisment
Advertisements
இதில், குரூப் 2 தேர்வு அறிவிப்பு பிப்ரவரி மாதத்திலும், மற்றும் குரூப் 4 தேர்வு அறிவிப்பு 2022 மார்ச் மாதத்திலும் வெளியாகும் என்று TNPSC தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து தேர்வு முறைகள் மற்றும் பாடத்திட்டங்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி TNPSC தேர்வுகளில் தமிழ் மொழி தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசுப்பணிகளில் 100% தமிழர்கள் இடம்பெறும் வகையில், தமிழ் மொழித் தகுதித் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அரசாணையில், தமிழ் மொழித் தகுதித் தேர்வில் 40% மதிப்பெண்கள் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழித் தகுதித் தேர்வில் 40% மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே மற்ற பாடத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தமிழ் மொழித் தகுதித்தேர்வுக்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு தரத்தில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், தேர்வுக்கான புதிய பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் எவ்வாறு அமையும் என்ற கேள்வி அரசு போட்டித்தேர்வு எழுதவுள்ளோர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனையடுத்து, தமிழ் மொழித் தகுதித் தேர்வுக்கு ஏற்ப ஒவ்வொரு தேர்வின் தேர்வு முறை மற்றும் பாடத்திட்டங்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த தகவல்களையும் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த புதிய பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை குறித்த விவரங்கள் https://www.tnpsc.gov.in/English/new_syllabus.htmlஎன்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு தேர்வுக்குமான மாதிரி வினாத்தாள்களும் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே TNPSC போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் இந்த பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்களை பார்த்து தெரிந்து கொண்டு பயனடையலாம் என்றும் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil