கிராம நிர்வாக அலுவலர் (VAO), டைப்பிஸ்ட், ஸ்டெனோகிராபர், பீல்டு சர்வேயர் உள்ளிட்ட 6,491 பணியிடங்களுக்காக நடத்தப்பட உள்ள குரூப் 4 தேர்விற்கு 10 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் என்றழைக்கப்படும் தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன், குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பை, சில தினங்களுக்கு முன் வெளியிட்டது. 6491 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஜூன் 14 முதல் ஜூலை 14ம் தேதி ஆன்லைன் மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று (10ம் தேதி) மாலை வரை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள், இந்த தேர்விற்கு விண்ணப்பித்து உள்ளனர். தேர்வுக்கட்டணத்தை, வரும் 16ம் தேதி வரை செலுத்தலாம்.
இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க இன்னும் சில தினங்களே எஞ்சியுள்ளது. இந்த நிலையில், மேலும் பலர் விண்ணப்பிக்கலாம் என்பதை கருத்தில் கொண்டு தேவையான அளவிற்கு கம்ப்யூட்டர் வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடைசி தேதி : தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ( ஜூலை 14), தேர்வு நாள் செப்டம்பர் 01. தேர்விற்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில், விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு (கடைசி தேதி) நீட்டிக்க இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் அவர்களின் யூசர் லாகின் மற்றும் பாஸ்வேர்டு உள்ளிட்டவற்றை மறந்துவிட்டால் அதனை மிகவும் எளிமையாக மீட்டெடுக்க டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
பதிவுக்கட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் அவர்களின் பணப்பரிமாற்ற விவரத்தினை, விண்ணப்பம் செலுத்தும் பக்கத்தில் உள்ள view previous payment என்ற லிங்கை தேர்வு செய்து பணப்பரிமாற்றம் நிறைவடைந்துவிட்டதா? அல்லது தோல்வியடைந்துவிட்டதா? என்பதை தெரிந்து கொள்ளலாம். பணப்பரிமாற்றம் தோல்வியடைந்துவிட்டால் அவர்கள் பணம் செலுத்துவதற்கான கடைசி நாளுக்குள் மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டும்.
உதவிமைய எண்கள் : பதிவுக்கட்டணம், தேர்வுக்கட்டணம், தேர்வு குறித்த தகவல்கள் தொடர்பான விபரங்களுக்கு உதவி மைய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன காலை 10 மணி முதல் மாலை 5.45 வரை தேர்வாணையத்தின் விண்ணப்பதாரர் உதவி மைய எண்களான 044-25300336, 25300337, 25300338, 25300339 ஆகிய தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் அல்லது helpdesk@tnpscexams.in என்ற இமெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.