குரூப் 1, குரூப் 1பி பதவிகளுக்கான முதன்மைத் தேர்வில் கருப்பு நிற மை கொண்ட பேனாவை மட்டும் பயன்படுத்த வேண்டும் என டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது;
குரூப்-1, 1பி பணிகளில் வரும் காலிப் பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வில் தேர்வர்கள் கருப்பு மை பேனாவை (Black Ink Pen) (மையூற்று பேனா அல்லது பந்துமுனை பேனா அல்லது ஜெல் பேனா) மட்டுமே உபயோகிக்க வேண்டும்.
தேர்வர்கள் விடைப்புத்தகம் முழுவதும், அதாவது தேர்வு எண்ணை எழுதுதல், முதல் பக்கத்தில் கையொப்பமிடுதல், விடை எழுதுதல், படம் வரைதல், அடிக்கோடிடுதல், மேற்கோள்காட்டுதல், விடை புத்தகத்தில் பயன்படுத்தாத இடங்கள் மற்றும் தேவையான எண்ணிக்கைக்கு அதிகமான விடைகளை அடித்தல் போன்றவற்றுக்கு ஒரே வகையான கருப்பு மை பேனாவை (மையூற்றும், பந்துமுனை, ஜெல் பேனாக்கள்) மட்டுமே உபயோகிக்க வேண்டும்.
விடைத்தாள் செல்லாததாக்கப்படும் நிபந்தனைகள்:
தேர்வர்கள் மேற்கூறிய தேவைகளுக்கு ஒருவகை கொண்ட கருப்பு மை பேனாக்களை போதுமான எண்ணிக்கையில் வைத்திருக்க வேண்டும். கருப்பு மை பேனாக்களைத் தவிர மற்ற பேனாக்களை பயன்படுத்தினால் அவர்களுடைய விடைத்தாள் செல்லாததாக அறிவிக்கப்படும்.
மேலும், தேர்வர்கள் தேர்வு எழுதும்போது, ஒயிட்னர், ஸ்கெட்ச் பேனா, பென்சில், வண்ணப் பென்சில்கள், வண்ண மை பேனாக்கள், க்ரையான்ஸ் போன்றவற்றை உபயோகிக்க கூடாது.
வினாத்தொகுப்பு/ விடைப் புத்தகத்தில் குறிப்பாக அறிவுறுத்தப்பட்ட இடங்களைத் தவிர மற்ற இடங்களில் மதக் குறியீட்டினை எழுதுதல், தேர்வரின் பெயரை எழுதுதல், கையொப்பம், தொலைபேசி எண், அலைபேசி எண், வேறு ஏதேனும் பெயர்களை எழுதுதல், சுருக்கெப்பம் மற்றும் முகவரி எழுதுதல் போன்றவற்றை செய்யக் கூடாது.
தேர்வர் தன்னுடைய தேர்ச்சி தொடர்பாக விடைப் புத்தகத்தில் மதிப்பீட்டாளிரின் பரிவை தூண்டும் வகையில் எழுதக் கூடாது. விடைப் புத்தகத்தில் உரிய இடங்களில் தேர்வர் கையொப்பம் இடவில்லை என்றால் விடைத்தாள் செல்லாததாக்கப்படும்.
தேர்வர்கள் கேள்விக்கு தொடர்பில்லாத அல்லது தேர்வுக்கு சம்பந்தமில்லாத ஏதாவது கருத்துக்கள் மற்றும் பொருத்தமில்லாதவற்றை தனது அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் எழுதக் கூடாது.
விடைப்புத்தகத்தில் அச்சிடப்பட்டுள்ள பட்டைக்குறியீடு சேதப்படுத்தப்பட்டிருந்தால் விடைத்தாள் செல்லாததாக்கப்படும்.
பிற தேர்வர்களின் இருக்கைகளில் தவறாக அமர்ந்து தேர்வு எழுதுதல்/ பிற தேர்வர்களின் விடைப் புத்தகத்தை பயன்படுத்துதல் போன்ற நிகழ்வுகளில் விடைத்தாள் செல்லாததாக்கப்படும். இவ்வாறு டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“