scorecardresearch

TNPSC குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வு; முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை; தேர்வாணையம் தீவிர ஆலோசனை

குரூப் 2 தேர்வில் நடந்த குளறுபடிகள் தொடர்பாகவும், முறைகேடு புகார்கள் தொடர்பாகவும், முறைகேடுகளில் எத்தனை தேர்வர்கள் ஈடுபட்டார்கள் என்பது குறித்தும் தேர்வாணைய அலுவலகத்தில் ஆலோசனை

TNPSC Group 2 exam
TNPSC Group 2 exam

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வு பல்வேறு குளறுபடிகளுடன் நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தேர்வாணையத்தின் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்த தேர்வு மூலம் அரசுத் துறைகளில் 5,546 காலியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மை தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதில் குறிப்பிட்ட சில பதவிகளுக்கு மட்டும் நேர்முகத் தேர்வு நடைபெறும்.

இதையும் படியுங்கள்: TNPSC Group 2 Exam: குரூப் 2 மெயின் வினாத் தாள் கசிந்ததா? தேர்வு ரத்தாகுமா? தேர்வர்கள் குழப்பம்

இந்தப் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு மே 21 ஆம் தேதி நடைபெற்றது. அப்போது முதல் தேர்வை சிறப்பாக எழுதிய ஆயிரக்கணக்கானோர் முதன்மைத் தேர்வுக்காக பயிற்சி பெறத் தொடங்கினர். தேர்வு முடிவுகள் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பெண்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பான உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கால், காலதாமதம் ஆவதாக கூறப்பட்டது. பின்னர் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர், அதற்கேற்ப முடிவுகள் தயாரிக்கப்பட்டு நவம்பர் 8 ஆம் தேதி வெளியிடப்பட்டது. மேலும் முதன்மைத் தேர்வுகள் பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, தேர்ச்சி பெற்ற அனைவரும் நவம்பர் 8 முதல் பிப்ரவரி 25 ஆம் தேதி வரையிலான 100 நாட்களிலும் கடுமையாக படித்து, முதன்மைத் தேர்வுக்காக பயிற்சி பெற்றனர். தேர்ச்சி பெற்றவர்களில் பலர் தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்தும் பயிற்சி பெற்றனர். தமிழக அரசின் அண்ணா மேலாண்மை நிறுவனம் மூலமாகவும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. இப்படியாக தேர்வர்கள் கஷ்டப்பட்டு படித்து, பிப்ரவரி 25 ஆம் தேதி தேர்வை சிறப்பாக எழுத வேண்டும் எண்ணி, தேர்வு மையத்திற்கு வந்திருந்தனர்.

காலை 9 மணிக்குள் வருபவர்களுக்கே மட்டுமே அனுமதி எனக் கூறப்பட்டதால், பெரும்பாலான தேர்வர்கள் காலை 8.30 மணிக்கே வந்துவிட்டனர். காலை 9.30 மணிக்கு முதன்மைத் தேர்வின் முதல் தாளான தமிழ் மொழித் தகுதித் தேர்வு எழுத ஆரம்பிக்க வேண்டும். தேர்வு எழுதுவதற்கு 1 நிமிடங்கள் முன்னதாக தேர்வர்களுக்கு விடைத்தாள் வழங்கப்பட்டது. அவர்களுக்கான அறிவுரைகளை படித்துத் தெரிந்துக் கொள்ளவும், விடைத்தாள் அவர்களுக்கு உரியது தான என தெரிந்துக் கொள்ளவும், இப்படி முன்னதாகவே வழங்கப்பட்டது. அப்போது தான் தேர்வர்களுக்கும் அறைக் கண்காணிப்பாளர்களுக்கும் தெரிந்தது, விடைத்தாள்கள் மாறியுள்ளன என்று. சில இடங்களில் தேர்வர்களுக்கு விடைத்தாள் வழங்கப்பட்டவுடன் அவர்கள் பிரித்து வினாக்களை பார்த்ததாகவும் கூறப்படுகிறது. விடைத்தாள்கள் மாறி இருந்தது தெரிந்த உடன் விடைத்தாள்கள் திரும்ப பெறப்பட்டு, அறை வாரியாக பிரிக்கப்பட்டு தாமதமாக, சில இடங்களில் 10.30 மணிக்கு பிறகே வழங்கப்பட்டது.

இதனால் தேர்வர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். காலை எழுத வேண்டியது தமிழ் மொழித் தகுதித் தேர்வு என்பதால் சில தேர்வர்கள் சற்று இயல்பாக இருந்தனர். இருப்பினும் அனைத்து தேர்வர்களும் மதியம் நடைபெறும் முக்கிய தேர்வு குறித்து கவலை அடைந்தனர். ஆனால், தேர்வாணையம் தரப்பில் உரிய கால அவகாசம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டதால், தேர்வர்கள் ஆசுவாசமடைந்தனர். மதியம் 2 மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய தேர்வு 2.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது.

இந்தநிலையில், காலையில் ஏற்பட்ட தாமதத்தைப் பயன்படுத்தி மதுரை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் தேர்வர்கள் பாடப்புத்தகங்களைப் பார்த்தும், மொபைல் போன்களைப் பார்த்தும் கேள்விகளுக்கு உரிய விடைகளைத் தெரிந்துக் கொண்டு விடைகளை எழுதியதாக புகார் எழுந்தது. மதுரையில் நடந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்டம் நிர்வாகம் அறிவித்து இருந்தது.

இந்தநிலையில், தேர்வில் நடந்த குளறுபடிகள் தொடர்பாகவும், முறைகேடு புகார்கள் தொடர்பாகவும், முறைகேடுகளில் எத்தனை தேர்வர்கள் ஈடுபட்டார்கள் என்பது குறித்தும் தேர்வாணைய அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. முறைகேட்டில் ஈடுபட்டவர்களை தகுதி இழப்பு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tnpsc group 2 2a exam allegations discussed by high committee