தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2, 2A தேர்வுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 5860 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வுகள் நடத்தி நிரப்பி வருகிறது. அந்த வகையில் இரண்டாம் நிலையில் உள்ள 5,529 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு, கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற்றது. சுமார் 9 லட்சம் தேர்வர்கள் தேர்வை எழுதினர். மொத்தம் 116 நேர்காணல் கொண்ட பதவிகளுக்கும், நேர்காணல் இல்லாத 5,413 பதவிகளுக்கும் தேர்வு நடைபெற்றது.
இதற்கான தேர்வு முடிவுகள், பெண்கள் இடஒதுக்கீடு உள்ளிட்ட காரணங்களால் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டன. இந்த முதல்நிலைத் தேர்வில் 57,641 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான முதன்மைத் தேர்வு கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெற்றது.
ஆனால், இந்த முதன்மைத் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. தேர்வாணையம் குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்று அறிவித்து இருந்தது. தற்போது குரூப் 2 தேர்வு முடிவுகள் ஜனவரி 12 ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2, 2ஏ காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை 5,240 ஆக திருத்தி இருந்தது. இந்நிலையில், இந்த எண்ணிக்கையுடன் புதிதாக 620 காலிப் பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், குரூப் 2, 2ஏ காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை 5,860 ஆக அதிகரித்துள்ளது. இதனால் தேர்வு எழுதியவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதிகரிக்கப்பட்ட காலியிடங்களின் எண்ணிக்கை மற்றும் எந்தெந்த துறைகளில் எவ்வளவு அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதை https://www.tnpsc.gov.in/Document/English/ADDENDUM%20_03D_2022.pdf என்ற இணையதளப் பக்கத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“