குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வில் செய்யப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள் குறித்து டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள இரண்டாம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வை (செப்டம்பர் 14) நடத்தியது. இந்தத் தேர்வு மூலம் மொத்தம் 2540 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் நேர்முகத் தேர்வு அடங்கிய 534 பணியிடங்களும், நேர்முகத் தேர்வு அல்லாத 2006 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.
இந்தத் தேர்வுக்கான முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியிடப்பட்டன. குரூப் 2 பதவிகளுக்கு முதன்மைத் தேர்வுக்கு 7,987 பேர் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குரூப் 2ஏ பதவிகளுக்கு, 21,822 பேர் முதன்மை தேர்வுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் முதன்மைத் தேர்வு பிப்ரவரி 2, 8 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது. அதன்படி, குரூப் 2ஏ முதன்மைத் தேர்வு பிப்ரவரி 8 ஆம் தேதி காலை 9.30 முதல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்வு கொள்குறி வகை வினாக்கள் அடங்கிய தேர்வாக நடைபெறும்.
மேலும், குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுக்கான முதல் தாளாக நடத்தப்படும் தமிழ் மொழி தகுதித் தேர்வு, பிப்ரவரி 8 மதியம் 2.30 முதல் மாலை 5.30 வரை நடைபெற உள்ளது.
அதனைத்தொடர்ந்து குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கான இரண்டாம் தாளான விரிந்துரைக்கும் வகையிலான தேர்வு பிப்ரவரி 23 ஆம் தேதி நடைபெற உள்ளது.
குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுகள் தமிழகம் முழுவதும் 37 மையங்களில் நடைபெற உள்ளது.
மேலும், குரூப் 2ஏ முதன்மைத் தேர்வுக்கான தேர்வுமுறையும் மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக கொள்குறி வகை வினாக்கள் அடங்கிய குரூப் 2ஏ முதன்மைத் தேர்வு கணினி வழித் தேர்வாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில், குரூப் 2ஏ முதன்மைத் தேர்வு ஓ.எம்.ஆர் தாள் மூலம் நடத்தப்படும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.