டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் மே மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள இரண்டாம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வை (செப்டம்பர் 14) நடத்தியது. இந்தத் தேர்வு மூலம் மொத்தம் 2327 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் நேர்முகத் தேர்வு அடங்கிய 507 பணியிடங்களும், நேர்முகத் தேர்வு அல்லாத 1820 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.
குரூப் 2 முதல்நிலைத் தேர்வுக்கு 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில், 5.81 லட்சம் தேர்வர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இந்த குரூப் 2 தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்பு 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி குரூப் 2 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
பின்னர் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் முதன்மைத் தேர்வுகள் நடைபெற்றன. அந்த வகையில், தமிழ் மொழித் தகுதித் தேர்வு 02.02.2025 அன்று விரிந்துரைக்கும் வகையில் நடைபெற்றது. குரூப் 2ஏ பதவிகளுக்கான கொள்குறி வகைத் தேர்வு ஆன்லைன் வாயிலாக 08.02.2025 அன்று நடைபெற்றது. குரூப் 2 பதவிகளுக்கான விரிந்துரைக்கும் வகைத் தேர்வு 23.02.2025 அன்று நடைபெற்றது.
இந்தநிலையில், குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் வருகின்ற மே மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது.