TNPSC Group 2 Exam 2024: டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 முதல்நிலைத் தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதனை டவுன்லோட் செய்வது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள இரண்டாம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வை நேற்று (செப்டம்பர் 14) நடத்தியது. இந்தத் தேர்வு மூலம் மொத்தம் 2327 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் நேர்முகத் தேர்வு அடங்கிய 507 பணியிடங்களும், நேர்முகத் தேர்வு அல்லாத 1820 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.
குரூப் 2 முதல்நிலைத் தேர்வுக்கு 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில், 5.81 லட்சம் தேர்வர்கள் தேர்வு எழுதியுள்ளனர். அதாவது வருகை சதவிகிதம் 73.22% ஆக உள்ளது.
இந்தக் குரூப் 2 முதல்நிலைத் தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெற்றது. முதல் பகுதியில் பொது அறிவில் 75 கேள்விகளும், திறனறி பகுதியில் 25 கேள்விகளும் இடம்பெற்றன. இரண்டாம் பகுதி மொழிப் பாடப்பகுதி. இதில் தமிழ் அல்லது ஆங்கில பாடத்தில் இருந்து 100 கேள்விகள் இடம்பெற்றன.
இந்தநிலையில், குரூப் 2 தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்பு தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே இந்த விடைக்குறிப்பை எப்படி டவுன்லோட் செய்வது என்பதை இப்போது பார்ப்போம்.
குரூப் 2 ஆன்சர் டவுன்லோட் செய்வது எப்படி?
முதலில் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கமான https://www.tnpsc.gov.in/ என்ற பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.
அதில் நியமனம் (Recruitment) என்ற மெனுவை கிளிக் செய்தால், கீழே இடம் பெறும் இணைப்புகளில் இருந்து ஆன்சர் கீ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
இப்போது கொள்குறி வகை அல்லது விரிவான விடையளிக்கும் வகை என்ற விருப்பம் கேட்கப்படும். இதில் கொள்குறி வகை என்பதை கிளிக் செய்தால், ஆன்சர் கீ இணைப்புகள் உள்ள பக்கத்திற்குச் செல்லும்.
அந்தப் பக்கத்தில் குரூப் 2 முதல்நிலைத் தேர்வு என்பதை கிளிக் செய்ய வேண்டும். இப்போது புதிய பக்கத்தில் பொது அறிவு மற்றும் பொது தமிழ், பொது அறிவு மற்றும் ஆங்கிலம் என்ற இணைப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும்.
இதில் நீங்கள் தேர்வு எழுதிய விருப்பப் பாடங்களை கிளிக் செய்தால் புதிய பக்கத்தில் விடைதாள் உத்தேச விடைகளுடன் காண்பிக்கப்படும். இதனை டவுன்லோட் செய்து உங்கள் விடைகளை சரிபார்த்துக் கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“