TNPSC group 2 exam how to apply details for aspirants: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், குரூப் 2 தேர்வுக்கான தகுதிகள், பாடத்திட்டம், மற்றும் விண்ணப்பம் செய்வது எப்படி? உள்ளிட்ட தேர்வர்களுக்கான முக்கிய தகவல்களை இப்போது பார்ப்போம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), பல்வேறு வகையான பதவிகளுக்கு குரூப் 1, குரூப் 2, குரூப் 4 மற்றும் இதர தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில் குரூப் 2 தேர்வு முக்கிய தேர்வாக இருந்து வருகிறது. குரூப் 2 தேர்வானது நேர்முத் தேர்வு உள்ள பதவிகள் மற்றும் நேர்முகத் தேர்வு இல்லாத பதவிகள் என இருவிதமான பதவிகளுக்கும் சேர்த்து ஒரே தேர்வாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு குரூப் 2 தேர்வுகளில் 5529 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குரூப் 2 பதவிகள்
நேர்முகத் தேர்வு கொண்ட குரூப் 2 தேர்வின் கீழ் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், சார் பதிவாளர், லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர், புலனாய்வு பிரிவு சிறப்பு உதவியாளர், குற்றப்பிரிவு சிறப்பு உதவியாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பட உள்ளன.
நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளில் நகராட்சி ஆணையர், துணை வணிகவரி அலுவலர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் (ஏஎஸ்ஓ), உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர், அரசின் பல்வேறு துறைகளின் உதவியாளர், நேர்முக எழுத்தர், தலைமை செயலகம் மற்றும் டிஎன்பிஎஸ்சியில் தனிப்பட்ட எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி
குரூப் 2 தேர்வுகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ஒரு சில பதவிகளுக்கு கூடுதலாக சில தகுதிகள் தேவைப்படும். எடுத்துக்காட்டாக, தனிப்பட்ட எழுத்தர் பதவிக்கு விண்ணப்பிக்க தட்டச்சு முடித்திருக்க வேண்டும். மேலும் குறிப்பிட்ட சில பதவிகளுக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு
குரூப் 2 பதவிகளுக்கான வயது தகுதி, பொதுபிரிவினருக்கு 18 முதல் 32 வரை ஆகும். இதில் பிற வகுப்பினர்களுக்கு வயது வரம்பு கிடையாது.
இதையும் படியுங்கள்: TNPSC குரூப் 2, 2ஏ; தேர்வு நேரம் மாற்றம், வயது வரம்பு தளர்வு; முக்கிய தகவல்கள்
தேர்வு முறை
குரூப் 2 தேர்வானது முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மை தேர்வு என இரு தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கு முன்பு ஒரே ஒரு தேர்வு மட்டுமே நடத்தப்பட்டது.
முதல்நிலைத் தேர்வு
முதல்நிலைத் தேர்வில் தமிழ் அல்லது ஆங்கிலம் மொழிப்பாடத்தில் இருந்து 100 வினாக்களும், பொது அறிவு பகுதியில் (பட்டப்படிப்புத் தரம்) 75 வினாக்களும் கணிதப் பகுதியில் (பத்தாம் வகுப்புத் தரம்) 25 வினாக்களும் என மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். இதற்கான கால அளவு 3 மணிநேரம்.
முதல்நிலைத் தேர்வு கொள்குறிவகைகளுக்கான தலைப்புகள்
தமிழ் அல்லது ஆங்கிலம் மொழிப்பாடம், பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், இந்தியாவின் புவியியல், இந்தியாவின் வரலாறும் பண்பாடும், இந்திய ஆட்சியியல், இந்தியப் பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம், தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக- அரசியல் இயக்கங்கள், தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம், திறனறி வினாக்கள் ஆகிய பகுதிகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.
முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாள்: 21.05.2022
தேர்வு நேரம்: காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 வரை
முன்னர் இந்த தேர்வுகள் காலை 10 மணி முதல் மதியம் 1 வரை நடைபெற்றிருந்த நிலையில், தற்போது தேர்வு நேரம் மாற்றப்பட்டுள்ளது.
முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.
முதன்மை தேர்வு
முதன்மைத் தேர்வு இரண்டு தாள்களாக நடைபெறும்.
தமிழ் மொழித் தகுதித் தேர்வு
முதல் தாள் தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இதில் மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படும். இதில் குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் பெற வேண்டும். இல்லையென்றால் இரண்டாம் தாள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது. இது தகுதித் தேர்வு மட்டுமே. இதற்கான கால அளவு 3 மணிநேரம்.
தமிழ் மொழித் தகுதித் தேர்வுக்கான தலைப்புகள் (விரிவான எழுத்துத் தேர்வு)
- தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தல்
- ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தல்
- சுருக்கி வரைதல் (Precis Writing)
- பொருள் உணர்திறன் (Comprehension)
- திருக்குறள் தொடர்பாக கட்டுரை எழுதுதல்
- கடிதம் வரைதல் (அலுவல் சார்ந்தது)
- தமிழ் மொழியறிவு
இரண்டாம் தாள்
பொது அறிவு பகுதியிலிருந்து விரிவான விடையளித்தல் தேர்வாக அமையும். இந்த தேர்வு 300 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் நடைபெறும். இதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் 102.
முதன்மைத் தேர்வில் தகுதி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவர். அதிலும் தகுதி பெறுபவர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியிடங்கள் வழங்கப்படும். நேர்முகத் தேர்வுக்கான மதிப்பெண்கள் 40. நேர்முகத் தேர்வு அல்லாத பணியிடங்களுக்கு முதன்மைத் தேர்வின் இரண்டாம் தாளில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் வேலை கிடைக்கும்.
விண்ணப்பிப்பது எப்படி?
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.03.2022
விண்ணப்பிக்கும்போது உங்களின் விவரங்களை சரியாக பதிவிடவும். இல்லையென்றால் நீங்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் உங்களுக்கு வேலை கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். எனவே புகைப்படம், கையொப்பம், கல்விச் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ், பிற சான்றிதழ்கள் ஏதேனும் இருப்பின் அவற்றையும் சேர்த்து, விண்ணப்பிக்கும் போது சான்றிதழ் எண் மற்றும் அதில் குறிப்பிட்ட தேதி மற்றும் மதிப்பெண் விவரங்களை ஒருமுறைக்கு இருமுறை சரி பார்த்து விண்ணப்பித்துக் கொள்ளவும். உங்களின் பட்டப்படிப்பு விவரங்களை சரியாக குறிப்பிடவும். ஏனெனில் சில பதவிகளுக்கு, குறிப்பிட்ட பாடப்பிரிவுகள் படித்தவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும். அல்லது சில பதவிகளில் முன்னுரிமை வழங்கப்படும்.
இந்த அறிவிப்பு தொடர்பான மேலும் விவரங்களுக்கு https://www.tnpsc.gov.in/Document/english/2022_03_CCSE_II_Notfn_Eng_Final.pdf என்ற இணையதளப்பக்கத்தினை பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.