TNPSC Group 2 exam Tamil News: தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் அரசு பணியாளர் தேர்வு வாரியம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 5,446 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு அறிவிக்கப்பட்டது. இதற்கான முதல்நிலை தேர்வு 2022 மே 21ல் நடந்தது. நவம்பர் 8ம் தேதி முடிவுகள் வெளியாகின. இதில் 55,071 பட்டதாரிகள் தேர்ச்சி பெற்றனர்.
இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2 – ல் நேர்முகத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பணிகளுக்கான முதன்மை தேர்வை இன்று நடைபெற்றது. காலையில் தமிழ் மொழி தகுதித் தாள் தேர்வும், மதியம் பொதுத் தேர்வும் நடத்தப்பட்டது. சென்னை உள்பட தமிழகத்தின் 20 மாவட்டங்களில் 186 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வர்கள் தேர்வு எழுதினர். காலை 9.30 மணிக்கு தேர்வு துவங்கி 12.30 மணி வரை நடந்தது.
தேர்வர்கள் குழப்பம்
இந்நிலையில், தேர்வு நடந்த சில தேர்வு மையங்களில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. வினாத்தாளில் உள்ள பதிவு எண்கள் மாறி மாறி இருந்துள்ளன. இதனால், காலை 9.30 மணிக்கு தொடங்க இருந்த தமிழ் மொழி தகுதித் தாளுக்கான தேர்வு தாமதமானது. ஒரு சில மையங்களில் இந்த சிக்கல் உடனடியாக சரிசெய்யப்பட்டு தேர்வு தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், சில மையங்களில் மாறியிருக்கும் பதிவு எண்களைச் சரிசெய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது தேர்வர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே, ‘தாமதத்துக்கு ஏற்ப கூடுதல் நேரம் தேர்வு எழுத வழங்கப்படும்’ என டிஎன்பிஎஸ்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதன்பிறகு, குளறுபடிகள் சரிசெய்யப்பட்டு தமிழ் மொழி தகுதி தாளுக்கான தேர்வு நடந்தது.

வினாத் தாள் கசிந்ததா?
இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான வினாக்கள் முன்கூட்டியே வெளியாகியதாக தகவல்கள் பரவியது. அதாவது தேர்வுக்கான வினாத்தாள், விடைத்தாள் ஆகியவற்றில் ஏற்பட்ட பதிவு எண் குளறுபடியால் அவற்றை தேர்வறை கண்காணிப்பாளர்கள் திரும்ப பெற்றனர். ஆனால், அந்த இடைவெளியில் பலரும் வினாத்தாள்களில் இடம்பெற்றிருக்கும் கேள்விகளை பார்த்துவிட்டனர். மேலும், குளறுபடியை சரிசெய்யும் வேளையில் தேர்வறையை விட்டு பலரும் வெளியேறியதாகவும் விடைகளை தெரிந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
Tnpsc failure…Not conducting exams even after 10am..group 2 tnpsc mains pic.twitter.com/9DMSvbUq2m
— Muthamizh (@VendanMuthamizh) February 25, 2023
மேலும், சிலர் தாங்கள் கொண்டு சென்ற புத்தகம் மற்றும் தேர்வறைகளுக்கு வெளியே நிற்கும் குடும்பத்தினரிடம் இருக்கும் மொபைல்போன்களை பெற்று, கூகுளில் தேடி அந்த கேள்விகளுக்கான விடைகளை படித்து தெரிந்து கொண்டு மீண்டும் தேர்வறை சென்றதாகவும் கூறப்படுகிறது. அதோடு இன்னும் சிலர் தாங்கள் பயிலும் கோச்சிங் சென்டரையும், நண்பர்களையும் தொடர்பு கொண்டு கேள்விகளுக்கான விடைகளை பெற்றதாகவும் கூறப்படுகிறது.
தேர்வு ரத்தாகுமா?
இந்நிலையில், இந்த தேர்வை ரத்து செய்து மாற்று தேதியில் புதிய வினாத்தாள்களுடன் தேர்வு நடத்த வேண்டும் என்று பலரும் வலியுறுத்தியுள்ளனர். இதனால், தேர்வு ரத்து செய்யப்படுமா? என்ற அச்சத்தில் பலரும் உள்ளனர். எனினும், இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தற்போதுவரை அறிக்கையும் வெளியிடவில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil