TNPSC Group 2 Exam Result 2019 Declared Today: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தேர்வுகள் நடந்து எட்டு மாதத்திற்கு உள்ளாக தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப்-2 (நேர்முகத் தேர்வு பதவிகள்) பதவிகளில், 1,338 காலிப்பணியிடங்களை நிரப்பும் தேர்வுக்கான அறிவிக்கை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி வெளியிடப்பட்டது. முதல்நிலைத்தேர்வு, நவம்பர் 11ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் 6 லட்சத்து 26,970 பேர் பங்கேற்றனர். முல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 14,797 பேருக்கு கடந்த பிப்ரவரி 23ம் தேதி முதன்மை தேர்வு நடத்தப்பட்டது.
பொதுவாக முதல்நிலைத் தேர்வு (கொள்குறி வகை) மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வு (விரிந் துரைக்கும் வகை) என இரு பகுதிகளாக நடத்தப்படும் தேர்வுகளின் முடிவுகளை வெளியிட ஒரு வருடத்துக்கும் மேல் ஆகும். ஆனால் சமீப காலமாக தேர்வாணையத்தின் சீரிய முயற்சியால் தேர்வு முடிவுகள் விரைவாக வெளியிடப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, குரூப் 2-ல் அடங்கிய பதவிகளுக்கு, முதன் மைத் தேர்வு நடத்தப்பட்ட 8 மாத காலத்துக்குள், தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
முதன்மை தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்டுள்ள 2,667 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in ல் வெளியிடப்பட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியன நவம்பர் 6-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.