கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்த டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வில் மதிப்பெண்கள் வழங்கியதில் முரண்பாடுகள் இருப்பதால் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என தேர்வர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்றது. இந்த தேர்வு மூலம் சார் பதிவாளர், நகராட்சி ஆணையர், வருவாய் ஆய்வாளர் மற்றும் பல்வேறு துறை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இந்த குரூப் 2 தேர்வின் முதன்மைத் தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்றது. முடிவுகள் இந்த ஆண்டு வெளியிடப்பட்டு, 5,000 பேருக்கு மேல் அண்மையில் பணி வழங்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது குரூப் 2 தேர்வுக்கான விடைத்தாள் நகல்களை டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி தங்கள் விடைத்தாள் நகலை பெற்றுக் கொள்ளலாம்.
முதன்மைத் தேர்வைப் பொறுத்தவரை ஒரு விடைத்தாளை 2 மதிப்பீட்டாளர்கள் மதிப்பீடு செய்வர். இருவரின் சராசரி மதிப்பெண் தேர்வருக்கு இறுதி மதிப்பெண்களாக வழங்கப்படும். இரண்டு மதிப்பீட்டாளருக்கும் இடையிலான வித்தியாசம் அதிகமாக இருப்பின் மூன்றாவது மதிப்பீட்டாளர் மதிப்பீடு செய்வார். அதுவே இறுதியானதாக இருக்கும்.
இந்தநிலையில், இந்தத் தேர்வில் பலருக்கு மதிப்பெண்களில் முரண்பாடுகள் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. அதாவது தேர்வர் ஒருவருக்கு ஒரு கேள்விக்கு 12 மதிப்பெண்களுக்கு முதல் மதிப்பீட்டாளர் 10 மார்க் கொடுத்துள்ள நிலையில், 2வது மதிப்பீட்டாளர் 0.5 மதிப்பெண் வழங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்ததாக 38வது கேள்விக்கு முதல் மதிப்பீட்டாளர் 12க்கு 8 மதிப்பெண்கள் வழங்கிய நிலையில், இரண்டாவது மதிப்பீட்டாளர் பூஜ்ஜியம் வழங்கி இருக்கிறார். இதேபோன்று மற்றொரு தேர்வருக்கு, 36வது கேள்விக்கு, 12க்கு 7.5 மதிப்பெண்கள் வழங்கிய நிலையில், மற்றொருவர் வெறும் பூஜ்ஜியம் மதிப்பெண் வழங்கியுள்ளார். 15வது கேள்விக்கு, முதல் மதிப்பீட்டாளர் 12க்கு 6 மதிப்பெண் வழங்கிய நிலையில், மற்றொருவர் வெறும் ஒரு மதிப்பெண் வழங்கியிருக்கிறார்.
இதேபோல் சில தேர்வர்களுக்கு மொத்த மதிப்பெண்களில் இரு மதிப்பீட்டாளர்களுக்கும் இடையே 30-40 மதிப்பெண்கள் வரை வித்தியாசம் உள்ளது. அந்த வகையில் சுமார் 350 பேருக்கு மதிப்பெண்களில் முரண்பாடுகள் இருப்பதாக புகார் எழுந்தது. இதனையடுத்து தேர்வில் ஏதேனும் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என தேர்வர்கள் சந்தேகிக்கின்றனர்.
இதுதொடர்பாக நட்ராஜ் அகாடமியின் நட்ராஜ் சுப்பிரமணியன் யூடியூப் பக்கத்தில் முரண்பாடுகளை சுட்டிக்காட்டி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். மேலும் முதல்வர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேபோல் ரேடியன் ஐ.ஏ.எஸ் அகாடமியின் ராஜபூபதியும் மதிப்பெண்கள் முரண்பாடுகளை சுட்டிகாட்டி, தேர்வு நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“