குருப் 2ஏ பதவிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான 3 ஆம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஆகஸ்ட் 14 ஆம் தேதி நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையச் செயலாளர் எஸ்.கோபால சுந்தரராஜ் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ”குருப்-2 ஏ பணிகளில் அடங்கிய நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளை நிரப்புவதற்கான முதன்மை எழுத்துத் தேர்வு 25.02.2023 அன்று நடத்தப்பட்டு முடிவுகள் ஏப்ரல் 8 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, 2 கட்டங்களாக சான்றிதழ் சரிபார்ப்பும், கலந்தாய்வும் நடத்தப்பட்டு பணியிடங்கள் நிரப்பப்பட்டன.
இந்நிலையில், எஞ்சியுள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான 3 ஆம் கட்ட மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஆகஸ்ட் 14 ஆம் தேதி சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தில் நடைபெறும். இதற்கு அழைக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.
கலந்தாய்வுக்கான அழைப்பாணையை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட தேர்வர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அழைப்பாணை தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது.
தேர்வர்கள் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசை, இடஒதுக்கீட்டு விதிகள், விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் மற்றும் காலியிடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படுவர்.
எனவே, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படும் அனைவருக்கும் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு பணிநியமனம் வழங்கப்படும் என்பதற்கு உறுதி அளிக்க இயலாது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு கலந்துக் கொள்ள தவறியவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது.” இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“