/indian-express-tamil/media/media_files/iTzLDtFAwRB6B0qd5n8p.jpg)
TNPSC Group 4 Expected Cut Off: கடைசி நேரத்தில் பணியிடங்கள் அதிரடியாக அதிகரிப்பு; டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 கட் ஆஃப் எவ்வளவு குறையும்?
தமிழ்நாட்டில் அதிக தேர்வர்கள் எழுதும் முக்கிய போட்டித்தேர்வான டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2025-ம் ஆண்டுக்கான குரூப்-4 தேர்வு அறிவிப்பு கடந்த ஏப்.25 அன்று 3,935 காலிப்பணியிடங்களுக்கு வெளியிடப்பட்டது.
டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 ஒரே கட்ட எழுத்துத் தேர்வு ஜூலை 12 அன்று நடைபெற்றது. காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என டி.என்.பி.எஸ்.சி தலைவர் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது முதல்கட்டமாக 727 கூடுதல் இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 4,662 ஆக உயர்ந்துள்ளது.
குரூப்-4 தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் உள்ளிட்ட பதவிகளுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இத்தேர்வுக்கு குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது என்பதால், ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான தேர்வர்கள் இதை எழுதுகின்றனர். இந்த ஆண்டு மட்டும் மொத்தம் 11.48 லட்சம் பேர் தேர்வெழுதியுள்ளனர். ஜூலை 12 அன்று நடைபெற்ற தேர்வுக்குப் பின், தமிழ் தாள் பகுதி கடினமாக இருந்ததாகக் கூறி தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்தக் கோரி தேர்வர்கள் சில பகுதிகளில் போராட்டமும் நடத்தினர்.
கட்-ஆஃப் கணிப்புகள்: கணிசமாகக் குறைய வாய்ப்பு
காலிப்பணியிடங்கள் கிட்டத்தட்ட 18.5% அளவுக்கு எதிர்பாராத விதமாக அதிகரித்துள்ளது, தேர்வர்களின் கட்-ஆஃப் மதிப்பெண்களில் குறிப்பிடத்தக்க அளவில் குறைய வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது காலிப்பணியிடங்கள் அதிகரித்துள்ளதால், இந்த கட்-ஆஃப் கணிப்புகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்-ஆஃப் நிர்ணயிக்கும் முக்கிய காரணிகள்
பொதுவாக, ஒரு தேர்வுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் பின்வரும் 3 முக்கிய காரணிகளைச் சார்ந்து இருக்கும்.
வினாத்தாளின் கடினத்தன்மை (Difficulty Level): வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்தால், தேர்வர்களின் சராசரி மதிப்பெண்கள் குறைந்து, கட்-ஆஃப் குறைய வாய்ப்புள்ளது.
காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை (Number of Vacancies): காலிப் பணியிடங்கள் அதிகமாக இருந்தால், கட்-ஆஃப் மதிப்பெண்கள் குறைய அதிக வாய்ப்புள்ளது.
போட்டியாளர்களின் எண்ணிக்கை மற்றும் செயல்திறன் (Competitors' Performance): தேர்வுக்கு விண்ணப்பித்த மற்றும் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது போட்டி கடுமையாகும்; எனினும், அவர்களின் ஒட்டுமொத்த சராசரி மதிப்பெண்களே கட்-ஆஃபை முடிவு செய்யும்.
எதிர்பார்க்கப்படும் கட்-ஆஃப் மதிப்பெண்கள் (தோராயமாக)
குரூப்-4 தேர்வு மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. இதில், பகுதி-அ (தமிழ் தகுதித் தேர்வு) பகுதியில் குறைந்தபட்சம் 40% (60 மதிப்பெண்கள்) பெறுவது கட்டாயமாகும். இந்தப் பிரிவில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, பகுதி-ஆ (பொது அறிவு மற்றும் திறனறிதல்) பகுதி மதிப்பீடு செய்யப்படும். சமீபத்திய தேர்வுப் போக்குகள் மற்றும் நிபுணர்களின் கருத்துக்களின் அடிப்படையில், இந்த ஆண்டு பல்வேறு பிரிவினருக்கான (300 மதிப்பெண்களுக்கு) எதிர்பார்க்கப்படும் தோராயமான கட்-ஆஃப் மதிப்பெண்கள் ரேடியன் ஐ.ஏ.எஸ். அகாடமி யூடியூப் சேனலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரிவு | கட்-ஆஃப் மதிப்பெண்கள் (தோராயமாக) |
பொதுப் பிரிவு (OC) | 154 |
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC) | 152 |
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBC) | 151 |
பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப்பினர் (BCM) | 145 |
தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (SC) | 147 |
பழங்குடியினர் (ST) | 141 |
இந்த மதிப்பெண்கள் அனைத்தும் தோராயமான எதிர்பார்ப்புகளே. அதிகாரப்பூர்வமான கட்-ஆஃப் மதிப்பெண்களை டி.என்.பி.எஸ்.சி மட்டுமே வெளியிடும். காலிப்பணியிடங்கள் 727 வரை அதிகரித்துள்ளதால், தற்போதைய சூழலில் இந்த முந்தைய கட்-ஆஃப் அளவிலிருந்து குறைந்தபட்சம் 1 முதல் 2 கேள்விகள் வரை கட்-ஆஃப் குறைய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது தேர்வர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசுத் துறைகளிடமிருந்து காலிப்பணியிடங்கள் பெறப்படும் பட்சத்தில் கலந்தாய்வுக்கு முன்பாக மொத்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த திடீர் காலிப்பணியிட அதிகரிப்பால் கட்-ஆஃப் எந்த அளவுக்குக் குறையும் என்பது தொடர்பாக தேர்வு நிபுணர்களின் துல்லியமான புதிய கணிப்புகளை IE தமிழ் அடுத்தடுத்து வெளியிடும்.
காலிப்பணியிடங்கள் அதிகரித்திருப்பது தேர்வர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இன்னும் அரசுத் துறை, நிறுவனங்களிடமிருந்து காலிப்பணியிடங்கள் பெறப்படும் பட்சத்தில் கலந்தாய்வுக்கு முன்பாக மொத்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் எனவும் TNPSC தெரிவித்துள்ளது. குரூப் 4 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், எந்த தேதியில் வெளியாகும் என்பது இன்னும் குறிப்பிடப்படவில்லை. முடிவுகள் வெளியானதும், தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
டி.என்.பி.எஸ்.சி அளித்த தகவலின்படி, கடந்த 5 நிதியாண்டுகளில் சராசரியாக 3 ஆயிரத்து 560 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 896 காலிப்பணியிடங்கள் கூடுதலாக நிரப்பப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி குறிப்பிட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னரே தேர்வு செய்யப்பட்டு, பணி நியமன ஆணைகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.