தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப் 4 பதவிகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2025 ஆம் ஆண்டிற்கான ஆண்டு திட்ட நிரலில் குரூப் 4 போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட உள்ளது. இதனையடுத்து இந்தத் தேர்வுக்காக லட்சக்கணக்கான தேர்வர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்தநிலையில், புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் குரூப் 4 தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், குரூப் 4 தேர்விற்கான கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், ஐ.டி.ஐ வளாகம், திருக்கோகர்ணம், புதுக்கோட்டை வளாகத்தில் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு 30.12.2024 (திங்கட்கிழமை) அன்று காலை 10.30 மணிக்கு தொடங்கப்பட உள்ளது.
இப்பயிற்சியின் போது கட்டணமில்லா பாடக்குறிப்புகள் வழங்கப்படும். ஒவ்வொரு வாரமும் மேற்படி தேர்விற்கான மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும். இந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரடியாக வருகை புரிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“