தமிழக அரசுத் துறைகளில் இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளில் காலியமாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை 2019 செப்டம்பர் 1 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி நடத்தியது. அந்த தேர்வின் முடிவுகள், அதே ஆண்டில் நவம்பர் 12 ஆம் தேதி வெளியானது. இந்த பணியிடங்களின் எண்ணிக்கை 9,882 ஆக அதிகரிக்கப்பட்டது.
இந்த எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் இதுவரை இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது.
பெரும்பாலான இடங்களுக்கு கலந்தாய்வு முடிந்துள்ள நிலையில், இளநிலை உதவியாளா்கள், தட்டச்சா்கள் என காலியாக உள்ள 430 பணியிடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறாமல் இருந்து வந்தது. அதன் பின்னர், கொரோனா தொற்று காரணமாக அடுத்தக்கட்ட கலந்தாய்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு தள்ளிச்சென்றது.
இந்நிலையில், இளநிலை உதவியாளர், நில அளவர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவிகளுக்கு வரும் 25-ம் (25-11-2021) தேதி சென்னை தேர்வாணைய அலுவலகத்தில் மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடைபெறுவதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
சான்றிதழ் மற்றும் கலந்தாய்விற்கான தேதி, நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்பு கடிதத்தினை டிஎன்பிஎஸ்சி இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என்றும், கலந்தாய்வு அழைப்பாணை தனியே தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக, தற்போது நடைபெறவுள்ள சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வில் பங்கேற்க தவறினால் மறுவாய்ப்பு வழங்கப்படாது என்றும் டிஎன்பிஎஸ்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil