தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியாகும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது.
முன்னதாக, புதிய இடஓதுக்கீடு மற்றும் உத்தேச கட் ஆஃப் தொடர்பான தகவல்கள் வெளியாகியிருந்தன. இதற்கிடையில், பெண்கள் இடஒதுக்கீடு தொடர்பான உயர் நீதிமன்ற தீர்ப்பு காரணமாக முடிவுகள் வெளியாகுவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், தீர்ப்புக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்பட்டு குரூப் 2 ரிசல்ட் வெளியிடப்பட்டது. அப்போது டிசம்பர் மாதத்தில் குரூப் 4 தேர்வு ரிசல்ட் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ரிசல்ட் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில், தற்போது குரூப்-4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் அறிவிக்கப்படும் என தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும், இது குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால், தமிழ்நாட்டில் 18.36 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியாகும் என்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது.
இதில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரைவாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் உள்ளன.
இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு 2022ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த குரூப் 4 தேர்வு 7301 பணியிடங்களுக்கு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/