தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், தமிழகம் முழுவதும் 1400க்கும் மேற்பட்ட விஏஓ காலியிடங்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அரசுத்துறைகளில் உள்ள காலியிடங்கள், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டு நிரப்பப்பட்டு வருகிறது. TNPSC யானது, குரூப் 4, விஏஓ முதல் குரூப் 1 பணியிடங்களுக்கான தேர்வுகளை நடத்துவதோடு, பிற அரசுத்துறை பணியிடங்களுக்கும் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதற்காக TNPSC ஒவ்வொரு வருடமும் அந்த வருடத்தில் நடைபெற உள்ள தேர்வுகளின் பட்டியலை வருடாந்திர அட்டவணையாக வழக்கமாக வெளியிடும்.
ஆனால் கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால் அட்டவணையில் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறவில்லை. இதனால் பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. தற்போது தொற்று குறைந்து வரும் நிலையில், விரைந்து தேர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அதிலும் குரூப் 4 தேர்வு அறிவிப்பை வெளியிட தேர்வர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பல தேர்வுகள் நடத்தப்படாமல் உள்ளது. ஆனால், கடந்த சில நாட்களாக பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. பல மாதங்களுக்கு பின்னர் TNPSC இந்த அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளதால் குரூப் 2 மற்றும் குரூப் 4 உள்ளிட்ட அடுத்தடுத்து புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
இதற்கு முன் விஏஓ தேர்வுகள் தனியாக நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது குரூப் 4 தேர்வுகளுடன் சேர்த்தே விஏஓ தேர்வு நடத்தப்படுகிறது. இதனிடையே குரூப் 4 தேர்வுக்கான பதவிகளில் ஒன்றான விஏஓ பதவிகளில் தமிழகம் முழுவதும் 1436 காலியிடங்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் குரூப் தேர்வு அறிவிப்பில் விஏஓ பணியிடங்களுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதேபோல் குரூப் 4 தேர்வுக்கான மற்ற பதவிகளிலும் அதிக எண்ணிக்கையில் காலியிடங்கள் வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
TNPSC ஆல் வெளியிடப்படும் தேர்வு அறிவிப்புகளில் அதிக காலியிடங்களை கொண்டுள்ள தேர்வு குரூப் 4 தேர்வு தான். இதில் தற்போது விஏஓ காலியிடங்களின் எண்ணிக்கை வெளியாகியுள்ளது. இதேபோல் மற்ற துறைகளிலும் அதிக காலியிடங்கள் உள்ளதால், இந்த முறை அதிக எண்ணிக்கையிலான பதவிகள் நிரப்பப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதே நேரம் ஒவ்வொரு முறையும் குரூப் 4 தேர்வை லட்சக்கணக்கானோர் எழுதி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக குரூப் 4 தேர்வு நடக்காததால், ஏற்கனவே தேர்வுக்கு தயாரானவர்களோட, தற்போது தேர்ச்சி பெற்றவர்களும் போட்டியிடுவர். எனவே தேர்வு மிக போட்டி மிகுந்ததாக இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக இந்த தேர்வை எதிர்நோக்கி ஆயிரக்கணக்கானோர் தயாராகி வருவதால், இன்னும் தேர்வுக்கு தயாராதவர்கள் உடனடியாக தயாராகி கொள்ளுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil