தேர்வர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் டி.என்.பி.எஸ்.சி-இன் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் குறித்த அறிவிப்பு முறையே பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வெளியிடப்படும் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது. இந்தநிலையில், தமிழ் மொழித் தகுதித் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே விடைத்தாள்கள் முழுமையாக மதிப்பீடு செய்யப்படும் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழக அரசுத்துறைகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப TNPSC பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில் முக்கியமான மற்றும் தேர்வர்கள் அதிகம் எதிர்நோக்கும் தேர்வுகளாக குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் உள்ளன. இந்தநிலையில், தமிழக அரசு, தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அரசு பணிகளில் சேர்வோருக்கு தமிழ் மொழி பற்றிய அறிவு அவசியம் தெரிந்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில், TNPSC தேர்வுகளில் சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.
அந்த வகையில் இனி தமிழ் மொழித் தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் பெறுபவர்கள் மட்டுமே அரசுப் பணிகளில் சேர முடியும். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழ் மொழித் தகுதித் தேர்வு தேர்வர்கள் அனைவருக்கும் கட்டாயமாக்கப்படுகிறது. தமிழ் மொழித் தகுதித் தேர்வுகான பாடத்திட்டம் 10-ம் வகுப்பு தரத்தில் நிர்ணயிக்கப்படுகிறது. மேற்கண்டவாறு நடத்தப்படும் கட்டாய தமிழ் மொழித் தகுதித் தேர்வில், குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் தேர்ச்சி கட்டாயமாக்கப்படுகிறது. தமிழ் மொழித் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் பிற தாள்கள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தற்போது TNPSC வெளியிட்டுள்ள தகவலின் படி, குரூப் 4 தேர்வு மற்றும் தேர்வில் விருப்ப மொழிப்பாடப்பிரிவு நீக்கப்பட்டு தமிழ் மொழி தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஆங்கில மொழி பாடப்பிரிவு நீக்கப்பட்டுள்ளது. இனி இந்த தேர்வுகளில் முதல் பகுதியில் 100 வினாக்கள் தமிழ் மொழி சார்ந்த வினாக்கள் மட்டுமே இடம்பெறும். இந்த தமிழ் மொழித் தகுதித் தேர்வில் 40 வினாக்கள் எடுத்தால் மட்டுமே, அடுத்த பகுதியான பொது அறிவுப் பகுதி மதிப்பிடப்படும். இருப்பினும் தமிழ் மொழி பாடப்பகுதி வினாக்களும் மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படும். அதாவது மொத்த மதிப்பெண்கள் தமிழ் மொழி மற்றும் பொது அறிவு பகுதிகளில் பெறும் மதிப்பெண்களைக் கொண்டுக் கணக்கிடப்படும். எனவே தமிழ் மொழித் தாளானது, தகுதி மற்றும் மதிப்பீட்டு தாளாக அமைகிறது.
அதேநேரம் குரூப் 2 போன்ற முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வுகள் கொண்ட தேர்வுகளில், தமிழ் மொழித் தகுதித் தேர்வானது முதன்மைத் தேர்வுடன் விரிந்துரைக்கு வகையிலான தேர்வாக அமைக்கப்படும். மேற்படி முதன்மை எழுத்துத் தேர்வானது மொழிப் பெயர்த்தல், சுருக்கி வரைதல், பொருள் உணர்திறன், சுருக்க குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல், கடிதம் வரைதல் மற்றும் கட்டுரை வரைதல் உள்ளிட்ட தலைப்புகள் கொண்டதாக நடத்தப்படும். இந்த தேர்வுகள் 100 மதிப்பெண்கள் கொண்டதாக அமைக்கப்படும். இந்த தகுதித் தேர்வில், குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் தேர்ச்சி தேர்ச்சி பெற்றால் மட்டுமே முதன்மைத் தேர்வின் பிற தாள்கள் மதிப்பீடு செய்யப்படும்.
இதில், குரூப் 4 தேர்வில், இளநிலை உதவியாளர் (Junior Assistant), தட்டச்சர் (Typist), சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist), கிராம நிர்வாக அலுவலர் (Village Administative Officer), வரித் தண்டலர் (Bill Collector), நில அளவர் (Field Surveyor), வரைவாளர் (Draftsman) ஆகிய 7 பணியிடங்கள் நிரப்பப்படும்.
இந்த குரூப் 4 தேர்வு எழுத பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி உடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வுகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை (மற்றும்/அல்லது) முதுநிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் 18 வயது முதல் 30 வரை உள்ளவர்கள் குரூப் 4 தேர்வை எழுதலாம். தமிழ்நாடு அரசு விதிகளின் குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு வயது வரம்பு சலுகைகளும் உண்டு.
குரூப் 2 தேர்வுகளைப் பொறுத்தவரை, நேர்முகத் தேர்வு கொண்ட குரூப் 2 தேர்வின் கீழ் நகராட்சி ஆணையர், துணை வணிகவரி அலுவலர், சார் பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் (ஏஎஸ்ஓ), உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் நிரப்பப்படுகின்றன.
அதே சமயம், நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளில் அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளர், நேர்முக எழுத்தர், தலைமை செயலகம் மற்றும் டிஎன்பிஎஸ்சியில் தனிப்பட்ட எழுத்தர் போன்ற பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
குரூப் 2 தேர்வுகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். குரூப் 2 பதவிகளுக்கான வயது தகுதி, பொதுபிரிவினருக்கு 20 முதல் 30 வரை ஆகும். இதில் பிற வகுப்பினர்களுக்கு 40 வயது வரை சலுகை உண்டு. சில பதவிகளுக்கு குறைந்தப்பட்ச வயது தகுதி மாறுபாடும்.
எனவே, TNPSC தேர்வுகளுக்கு தயாராகுபவர்கள், தாங்கள் எந்த தேர்வுக்கு தகுதியும் விருப்பமும் பெற்றுள்ளீர்களோ அந்த தேர்வுக்கான தமிழ் மொழித் தகுதித் தேர்வுப் பற்றிய விவரங்களைத் தெரிந்துக் கொண்டு அதற்கேற்றாற்போல் தயாராகிக் கொள்ளுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.