தமிழகம் முழுவதும் நாளை நடைபெற உள்ள குரூப் 4 தேர்வில் கடைசி நேரத்தில் தேர்வர்கள் நினைவில் கொள் வேண்டிய விதிமுறைகள் குறித்து வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 7301 பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் தேர்வுகள் நடத்தி பணியாளர்களை தேர்வு செய்து வருகின்றனர். அந்த வகையில் நாளை குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது தமிழகம் முழுவதுமு் 7689 மையங்களில் நடத்தப்படும் இந்த தேர்வுக்காக சுமார் 22 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில், நாளை நடைபெறும் குரூப் 4 தேர்வில் தேர்வர்கள் கடைசி நேரத்தில் மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த தேர்வுக்கான தேர்வர்கள் ஒரு மணி நேரம் முன்னதாக அதாவது 8.30 மணிக்கே தேர்வு அறைக்கு வந்துவிட வேண்டும். அதே சமயம் 9 மணிக்கு மேல் வருபவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
தேர்வு எழுத வரும் தேர்வர்கள் கண்டிப்பாக ஹால் டிக்கெட் எடுத்து வரவேண்டும். அதேபோல் அடையாளத்தை உறுதி செய்ய ஆதார்கார்டு. பாஸ்போர்ட், லைசன்ஸ், பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்து வரவேண்டும். தேர்வில் விடைகளை குறிப்பிட கருப்பு நிற பால்பாயின்ட் பென் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதேபோல் விடை தெரியாத வினாக்களுக்கு கடைசியாக E விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.
தேர்வர்கள் தங்களது ஓஎம்ஆர் தாளில் தவறாமல் தங்களது பதிவு எண்ணை கட்டாயமாக எழுத வேண்டும். அதேபோல் ஓஎம்ஆர் தாளில் தங்களது இடது கை பெருவிரல் ரேகையை வைக்க வேண்டும். தேர்வில் முறைகேடுகளை தவிர்க்க தேர்வறை கண்காணிப்பாளர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் நடமாடும் கண்காணிப்பு அலுவலர்கள் சிசிடிவி கேமராக்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
மேலும் தேர்வர்கள் சரியான நேரத்தில் தேர்வு மையத்திற்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil