டி.என்.பி.எஸ்.சி குருப் 4 தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி செயலாளர் எஸ்.கோபால சுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஒருங்கிணைந்த குருப்-4 தேர்வு முடிவுகள், தேர்வர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை விபரங்கள் அக்டோபர் 28 ஆம் தேதி தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
கணினி வழி சான்றிதழ் சரிபார்ப்புக்கு மதிப்பெண்கள், ஒட்டுமொத்த தரவரிசை எண், இடஒதுக்கீடு விதி, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அடிப்படையில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்டுள்ள தேர்வர்கள் தங்கள் சான்றிதழ்களை நவம்பர் 9 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை தேர்வாணையத்தின் இணையதளத்தின் ஒருமுறை பதிவு பிரிவு (ஒ.டி.ஆர்) வாயிலாக பதிவேற்றம் செய்யலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருப் 4 தேர்வு முடிவுகள் விரைவாக வெளியிடப்பட்ட நிலையில், தற்போது சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்டோர் பட்டியல் தேர்வு முடிவுகள் வெளியான ஒரு வாரத்திற்குள்ளாகவே வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“