டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை ஜூன் 6 ஆம் தேதி நடத்தியது. மொத்தம் 6244 பணியிடங்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வனக் காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 15.8 லட்சம் பேர் குரூப் 4 தேர்வை எழுதியுள்ளனர்.
இந்தநிலையில், ஜூன் 19 ஆம் தேதி குரூப் 4 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
குரூப் 4 தேர்வை பொறுத்தவரை தமிழ் பகுதியில் 100 கேள்விகளும், பொது அறிவு மற்றும் திறனறி பகுதியில் 100 கேள்விகளும் என 200 கேள்விகள் 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இந்த ஆண்டு தமிழ் பகுதி சற்று எளிதாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேநேரம் பொது அறிவு பகுதி சற்று கடினமாக இருந்ததாக கருதுகின்றனர். சில கேள்விகள் குரூப் 2, குரூப் 1 தேர்வுகளின் தரத்தில் இருந்ததாக கூறுகின்றனர். மேலும், திறனறி பகுதியில் வழக்கமாக 25 கேள்விகள் கேட்கப்படும் நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக 2 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. எனவே இந்த ஆண்டு கட் ஆஃப் சற்று குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அந்தவகையில், பொதுப் பிரிவினருக்கு 165 – 168, பி.சி பிரிவினருக்கு 164 – 167, எம்.பி.சி பிரிவினருக்கு 164 – 167 ஆக இருக்க வாய்ப்புள்ளது. பி.சி முஸ்லீம் பிரிவினருக்கு 157 – 160, எஸ்.சி பிரிவினருக்கு 161 – 164, எஸ்.சி.ஏ பிரிவினருக்கு 159 – 162, எஸ்.டி பிரிவினருக்கு 156 – 160 என்ற அளவில் எதிர்ப்பார்க்கப்படுகிறது. தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு இதிலிருந்து ஒரு மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது. மேலும் காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதால், கட் ஆஃப் இன்னும் குறைய வாய்ப்புள்ளது.
இருப்பினும் சில நிபுணர்கள் இதைவிட கட் ஆஃப் குறைய வாய்ப்புள்ளதாகவும் கூறுகின்றனர். சிலர் கடந்த ஆண்டை ஒட்டியே கட் ஆஃப் இருக்கும் என்று கூறுகின்றனர்.
இங்கு கட் ஆஃப் எனக் குறிப்பிடப்படுவது 300 மதிப்பெண்களுக்கு அல்லாமல், 200 கேள்விகளுக்கு எத்தனை சரியான கேள்விகள் என்பதே ஆகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“