டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை ஜூன் 9 ஆம் தேதி நடத்தியது. மொத்தம் 6244 பணியிடங்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வனக் காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழகம் முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் மொத்தம் 15.8 லட்சம் பேர் குரூப் 4 தேர்வை எழுதியுள்ளனர்.
இந்தநிலையில், ஜூன் 19 ஆம் தேதி குரூப் 4 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, குரூப் 4 தேர்வு முடிவுகள் வருகின்ற அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என்று தேர்வாணையம் அறிவித்தது.
இதற்கிடையில், குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டன. இதன்மூலம் குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 6724 ஆக உயர்ந்தது. மேலும், கடந்த சில நாட்களுக்கு முன் குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்கள் மீண்டும் அதிகரிக்கப்பட்டன. புதிதாக 2208 காலியிடங்கள் சேர்க்கப்பட்டு, தற்போது குரூப் 4 தேர்வுக்கு மொத்தமாக 8932 காலியிடங்கள் உள்ளன.
இந்த நிலையில் குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்களின் மதிப்பெண் விபரங்கள், பொது தரவரிசை மற்றும் சாதி வாரியான தரவரிசை ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்வர்கள் குரூப் 4 தேர்வு முடிவுகளை எளிதாக தெரிந்துக் கொள்ளும் வகையில், தேர்வாணையத்தின் முகப்பு பக்கத்திலே, இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் அந்த இணைப்பை கிளிக் செய்து, தங்களுடைய பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவிட்டு, தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“