டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தேர்வு எப்படி இருந்தது என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை ஜூலை 12 ஆம் தேதி நடத்தியது. இந்தத் தேர்வு மூலம் மொத்தம் 3935 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்த குரூப் 4 தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெற்றது. முதல் பகுதி கட்டாய தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இதில் 100 கேள்விகள் இடம்பெற்றிருந்தன. இரண்டாம் பகுதியில் பொது அறிவில் 75 கேள்விகளும், திறனறி பகுதியில் 25 கேள்விகளும் இடம்பெற்றிருந்தன.
இந்த குரூப் 4 தேர்வு சற்று கடினமாக இருந்ததாக தேர்வர்களும் நிபுணர்களும் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த குரூப் 4 தேர்வு, குரூப் 1 தேர்வு போல் இருந்ததாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
தமிழ் பகுதியில் கேள்விகள் குரூப் 2 அளவில் இருந்தன. மேலும் பாடப் புத்தகத்தை தாண்டி, பாடத்திட்டம் அடிப்படையில் சில கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. கணித கேள்விகள் எளிமையானதாக இருந்தாலும் நீண்ட நேரம் எடுத்துக் கொள்வதாக இருந்தன என்று நிபுணர் ஒருவர் தனது சமூக ஊடக பக்கத்தில் கூறியுள்ளார்.
பொது அறிவு கேள்விகள் சற்று கடினமாக இருந்தன. பாடப் புத்தகத்தை தாண்டி கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. தமிழ் பகுதியிலும் வினாக்கள் பாடப் புத்தகத்தை தாண்டி கேட்கப்பட்டு இருந்தன. பாடத்திட்டத்தை இலக்கியத்திலிருந்து இலக்கணமாக மாற்றியதால் சிரமமாக இருந்தது. கேள்விகள் நீளமானதாக இருந்தன. கூற்று – காரணம் அடிப்படையிலான கேள்விகள் அதிகம் இடம்பெற்று இருந்தன. கேள்விகள் கடினமாக இருந்ததால், கட் ஆஃப் மதிப்பெண் கணிப்பது கடினம். வினாத்தாள் புதுமையான முறையில் இருந்ததால் கட் ஆஃப் மதிப்பெண்களை கணிக்க முடியாது என அட்டா 24 தமிழ் யூடியூப் சேனலில் நிபுணர் விளக்கியுள்ளார்.