குரூப் 4 தேர்வு வினாத்தாள் கசிந்ததாக தகவல் வெளியான நிலையில், இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் குரூப் 4 நிலையில் காலியாக உள்ள 3935 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டி தேர்வு சனிக்கிழமை (ஜூலை 12) காலை நடைபெறுகிறது. இந்த போட்டி தேர்வு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. இதற்காக 38 மாவட்டங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த தேர்வை ஆண்கள் 5 லட்சத்து 26 ஆயிரத்து 553 பேரும், பெண்கள் 8 லட்சத்து 63 ஆயிரத்து 68 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 117 பேரும் என ஒட்டுமொத்தமாக 13 லட்சத்து 89 ஆயிரத்து 738 பேர் தேர்வை எழுதுகின்றனர். தேர்வு பணியில் நான்காயிரத்து ஐநூறு கண்காணிப்பாளர்கள் ஈடுபடுகின்றனர். இதையொட்டி தேர்வு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் இருந்து வினாத்தாள்கள் அனுப்பி வைக்கும் பணிகள் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றன. ஆனால், இந்த முறை வினாத்தாள்கள் தனியார் பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டது.
வழக்கமாக அரசு தேர்வின் போது வினாத்தாள்கள் கண்டெய்னர் போன்ற மூடப்பட்ட வாகனங்களில் எடுத்து செல்லப்படும். ஆனால் இந்த முறை தனியார் பஸ்களில் வினாத்தாள்கள் எடுத்து செல்லப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வின் போது வாகனங்களில் பணியில் இருந்த காவல்துறையினர் மூலமாக வினாத்தாள்கள் கசிந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தனியார் பேருந்துகளின் கதவு மற்றும் அவசர வழி கதவுகளுக்கு ஏ4 பேப்பர் ஒட்டி சீல்வைத்து வினாத்தாள்கள் அனுப்பி வைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தனியார் பேருந்துகளில் எடுத்து செல்வதால் வினாத்தாள் கசிய வாய்ப்பு உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. மேலும், லட்சக்கணக்கானோர் எழுதும் அரசு தேர்வுக்கான வினாத்தாளை இப்படி அனுப்புவதன் மூலம், வினாத்தாள் கசிய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இது தேர்வர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில், குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் கசியவில்லை என்று டி.என்.பி.எஸ்.சி விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக, டி.என்.பி.எஸ்.சி தலைவர் பிராபகர் கூறுகையில், டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் கசியவில்லை. தேர்வர்கள் அச்சப்பட தேவையில்லை. தனியார் பேருந்துகள் மூலம் வினாத்தாளை எடுத்துசென்றது குறித்து விளக்கம் கோரப்பட்டுள்ளது என்றார்.