/indian-express-tamil/media/media_files/2025/07/14/tnpsc-exam-2025-07-14-16-44-00.jpg)
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தேர்வு முடிவுகளில் லக் எனப்படும் அதிர்ஷ்டம் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து வெளியாகியுள்ள ஆய்வறிக்கை குறித்து இப்போது பார்ப்போம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை ஜூலை 12 ஆம் தேதி நடத்தியது. இந்தத் தேர்வு மூலம் மொத்தம் 3935 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்த குரூப் 4 தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெற்றது. முதல் பகுதி கட்டாய தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இதில் 100 கேள்விகள் இடம்பெற்றிருந்தன. இரண்டாம் பகுதியில் பொது அறிவில் 75 கேள்விகளும், திறனறி பகுதியில் 25 கேள்விகளும் இடம்பெற்றிருந்தன.
இந்த குரூப் 4 தேர்வு சற்று கடினமாக இருந்ததாக தேர்வர்களும் நிபுணர்களும் கருத்து தெரிவித்தனர். இதற்கிடையில், குரூப் 4 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மேலும் குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
இந்தநிலையில் டி.என்.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் குறித்த ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. இது குரூப் 4 தேர்வில் அதிர்ஷ்டம் எனப்படும் லக் செய்யும் வேலைகள் குறித்து ஆராய்ந்துள்ளது. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற குணால் மங்கல் இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டார். இன்றைய உலகமய, தனியார் மய சூழலிலும் இளைஞர்கள் ஏன் அரசு வேலை வாய்ப்புகளை நோக்கி செல்கின்றனர்? இளைஞர்களை தூண்டும் காரணிகள் என்ன? போட்டித் தேர்வுகள் சரியான நபர்களை கண்டறியுமா? அதிர்ஷ்டத்தின் பங்கு என்ன? இளைஞர்களின் உச்சபட்ச உயர்வுக்கு போட்டித் தேர்வுகள் தடையாக இருக்கின்றனவா? உள்ளிட்ட கேள்விகளின் அடிப்படையில் குணால் மங்கல் தனது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளார்.
குரூப் 4 தேர்வைப் பொறுத்தவரை ஒரே ஒரு எழுத்துத் தேர்வு அடிப்படையில் பணி நியமனம் நடைபெறுகிறது. 300 மதிப்பெண்களுக்கு அதிகமாக பெறுவர்களுக்கு இடஒதுக்கீட்டு அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும். இந்த குரூப் 4 தேர்வில் 200 கேள்விகள் கேட்கப்படும். தேர்வர்கள் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும். எதிர்மறை என்ற நெகட்டிவ் மதிப்பெண் கிடையாது. இந்த இடத்தில் தான் லக் முக்கிய பங்காற்றுகிறது. அதாவது தேர்வுக்கு நன்றாக தயாரான பெரும்பாலானவர்கள் 150 – 170 கேள்விகள் வரை சரியான விடையளித்திருப்பார்கள். இதர வினாக்களுக்கு உத்தேசமாக பதில் அளித்திருப்பார்கள். அதேநேரம் தேர்வுக்கு போதிய அளவில் தயாராகாதவர்கள் 50-70 கேள்விகளுக்கு சரியான பதிலையும், இதர கேள்விகளுக்கு உத்தேசமாக பதில் அளித்து இருப்பார்கள்.
இந்த உத்தேசமாக என்பது தேர்வருக்கு தேர்வர் மாறுபடும். சில நெருக்கமான இரண்டு விடைகளில் ஓன்றை தேர்வு செய்வர். சில தெரியாத அனைத்துக் கேள்விகளுக்கும் ஒரே ஆப்ஷனை தேர்வு செய்வர். எடுத்துக்காட்டாக சிலர் ஆப்ஷன் C-ஐ மட்டும் தெரியாத அனைத்து கேள்விகளுக்கும் தேர்வு செய்வர்.
ஆனால், தேர்வில் 150 கேள்விகளுக்கு மேல் சரியாக விடையளித்தவர்களுக்கும், 70 கேள்விகளுக்கு குறைவாக சரியாக விடையளித்தவர்களுக்கும் இடையிலான திறன் வேறுபாட்டைக் கண்டறிவது எளிது. ஆனால் 170 கேள்விகளுக்கும் 171 கேள்விகளுக்கும் இடையிலான திறன் வேறுபாட்டை கண்டறிவது கடினம். இருவரும் கிட்டத்தட்ட ஒரே அளவு திறன் உடையவராக இருப்பார்கள், ஆனால் உத்தேசமாக விடையளித்ததில் அதிர்ஷ்டத்தின் காற்று இருப்பவர்கள் வேலை பெறுவார்கள்.
இதனை வெளிப்படுத்தும் விதமாக குணால் மங்கல் தனது ஆய்வறிக்கையில், குரூப் 4 தேர்வுகளில் தேர்வர்கள் இடையே ஏற்படும் வேறுபாடுகளுக்கு அதிர்ஷ்டத்தின் பங்கை சுட்டிக்காட்டுகிறார். 2013 ஆம் ஆண்டில் நடந்த குரூப் 4 தேர்வில் மதிப்பெண் வேறுபாடுகளில் அதிர்ஷ்டத்தின் பங்கு 12% ஆகவும், 2017 ஆம் ஆண்டு தேர்வில் 9.5% ஆகவும், 2019 ஆம் ஆண்டு தேர்வில் 7% ஆகவும் குறைந்துள்ளது என்று குணால் மங்கல் குறிப்பிடுகிறார்.
மேலும் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று, பணி நியமனத்திற்கு போட்டியிடுபவர்களிடையே இந்த அதிர்ஷ்டத்தின் தாக்கம் அதிகம் இருப்பதாகவும், குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்கள் எந்த தாக்கத்தையும் அதாவது பூஜ்யம் அளவில் இருப்பதாகவும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் அதிர்ஷ்டமும் ஒரு பங்கு வகிப்பது தெரியவருகிறது.
ஆனால் அதிர்ஷ்டம் எல்லா தேர்வர்கள் இடையேயும் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே இந்த முறை 150க்கு மேல் சரியான கேள்விகளுக்கு விடையளித்தவர்கள், அதிர்ஷ்டத்தின் வாயிலை எதிர்நோக்கியிருக்கலாம்.
அதேநேரம், தேர்வுக்கு முறையாக தயாராகாமல், நாமும் எழுதிப் பார்ப்போம், விண்ணப்பித்து விட்டோம் எனவே சும்மா எழுதிப் பார்ப்போம் என தேர்வு எழுதுபவர்களுக்கு இந்த அதிர்ஷ்டம் கைகொடுப்பதில்லை. கடினமாக பயிற்சி செய்து தயாராகி பணி நியமனம் பெறும் அளவுக்கு சரியாக விடையளித்த 10000 – 15000 பேருக்கு இடையில் தான் இந்த அதிர்ஷ்டத்தின் விளையாட்டு இருக்கிறது.
மேலும் இந்த அதிர்ஷ்டத்தின் விளையாட்டு குரூப் 4 தேர்வுகளில் மட்டுமல்ல, குரூப் 2ஏ தேர்விலும், நேர்காணல் அல்லாத தொழில்நுட்ப பணி தேர்வுகளிலும் இதே தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.