/tamil-ie/media/media_files/uploads/2019/09/TNPSC.jpg)
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு வருகின்ற ஜூலை மாதம் நடைபெற உள்ள நிலையில், எளிதான, அதிக மதிப்பெண் பெறக் கூடிய தமிழ் இலக்கணம் பகுதியை 30 நாட்களில் படிப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை அறிவித்துள்ளது. இந்தத் தேர்வு மூலம் மொத்தம் 3935 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த குரூப் 4 தேர்வு வருகின்ற ஜூலை 12 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த குரூப் 4 தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி கட்டாய தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இது 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இரண்டாம் பகுதியில் பொது அறிவில் 75 கேள்விகளும், திறனறி பகுதியில் 25 கேள்விகளும் இடம்பெறும்.
குரூப் 4 தேர்வை பொறுத்தவரை தமிழ் எளிதான பகுதியாக தேர்வர்களால் கருதப்படும். பொது அறிவு எப்போது கடினமான பகுதியாக கருதப்படும். அதேநேரம் கணிதம் மற்றும் திறனறி அடங்கிய பகுதியும் சற்று கடினமானதாக உணரப்படும்.
குரூப் 4 தேர்வில் வெற்றி பெறுபவர்கள் தமிழில் 90 அல்லது 95 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களாக இருப்பார்கள். கடந்த ஆண்டுகளில் தமிழ் பாடப்பகுதியில் உரைநடைக்கு சமமான முக்கியத்துவம் இருந்த நிலையில், தற்போது இலக்கண பகுதிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த இலக்கணப் பகுதியை சரியாக படித்தால் 85க்கு 85 மதிப்பெண்கள் எளிதாக படிக்கலாம். அதனையும் 30 நாட்களிலே படிக்கலாம் என விருட்சம் டி.என்.பி.எஸ்.சி என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் கூறப்பட்டுள்ளது.
முதல் 15 நாட்களில் தமிழ் புத்தகங்களில் உள்ள இலக்கணப் பகுதியை படித்து முடித்துவிடுங்கள். 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள புத்தகங்களில் இலக்கணம், பயிற்சி வினாக்கள் மற்றும் மொழித் திறன் பயிற்சி ஆகிய பகுதிகளை இந்த 15 நாட்களில் படித்து முடித்துவிடுங்கள்.
இதில் 6 மற்றும் 7 ஆம் வகுப்புக்கு 3 நாட்கள், 8 ஆம் வகுப்பு 2 நாட்கள் எடுத்து படித்துக் கொள்ளுங்கள். 9 மற்றும் 10 ஆம் வகுப்புக்கு தலா 3 நாட்களும், 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு தலா 2 நாட்களும் எடுத்து படித்துக் கொள்ளுங்கள். மேலும் மனப்பாடம் செய்வதை விடுத்து புரிந்து படித்துக் கொள்ளுங்கள்.
அடுத்த 15 நாட்களில் சிலபஸ் வைத்து படித்துக் கொள்ளுங்கள். அலகு 1, 2, 3 ஆகியவற்றுக்கு தலா 3 நாட்களும், 4, 5, 6 ஆகிய அலகுகளுக்கு தலா 2 நாட்களும் எடுத்துக் கொள்ளுங்கள். 7 ஆவது அலகுக்கு 4 நாட்கள் எடுத்துக் கொள்ளுங்கள். திருக்குறளைப் பொறுத்தவரை தினமும் 2 அதிகாரங்களை எடுத்து படித்துக் கொள்ளுங்கள்.
இதன்பின்னர் தேர்வுக்கு மீதமிருக்கும் நாட்களில் அனைத்து பகுதிகளையும் திருப்புதல் செய்துக் கொள்ளுங்கள். இப்படி படித்தால் நிச்சயம் வெற்றி பெறலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.